Monday, August 29, 2016

லீலை




பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதமனத்தில் மாறாமல் நிற்கும் கேள்விகள் பல உண்டு. 'ஏனிப்படி?' என்று கேட்டுத் தவித்து நிற்கும் கேள்விகள். "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும்" ஏன்? என்பது திருவள்ளுவர் காலத்திலிருந்தே "நினைக்கப்பட்டு" வந்திருக்கிறது. அதற்கான விடையாகப் "புடவியின் பெருநியதி", "லீலை", "பொருளின்மை", போன்ற சொற்கள் சொல்லப்படுவதுண்டு. இன்றைய பகுதியில் பல கதாபாத்திரங்கள் இந்த "லீலாம்ருதம்"தனைக் கண்டு அதிர்வதைக் காணமுடிகிறது.

1. கம்சன் இளமைந்தர்களைக் கொல்ல ஆணையிட்டதை அறிய நேரும்போது கிருஷ்ணர் புடவி என்னும் கொலைக்களத்தைக் காண்கிறார். சாந்தீபனி முனிவர் அதை லீலை என்று விளக்குகிறார்.

2. ஆசிரியர் கொடையைக் கிருஷ்ணர் அளித்ததன்பின் அவரிடம் எழுப்பும் வினாவழியாக முனிவரும் லீலையை அறிகிறார். தன் அறிதல் அனைத்தும் அக்கேள்வியில் அழிந்துபட்டதை அறிந்து குருகுலத்தை விட்டு விலகிச்செல்கிறார்.

3. சாந்தீபனி குருகுலத்தின் இன்றைய முனிவர் தன் தந்தைக்கு நீர்க்கடன் செய்ய நேரும்போது லீலையை உணர்கிறார்.

4. இவைதவிர கிருஷ்ணர் யாதவகுலம் அழிவதைக் காணும்போது உணரவேண்டிய லீலைக்கான பழிச்சொல்லும் இருக்கிறது.

தன் ஆழ்மனதில் தான் நம்பிவரும் ஒன்று மறுக்கப்படும்போதுதான் "லீலை" என்ற சொல் இடிபோல் வந்திறங்குகிறது. அதுவரை "இருநிலைகளுக்கும் நடுவே அசையா நிகர்நிலை" கொண்டு லீலையைக் கண்டுவந்தவர்கள் அந்த லீலையின் வல்லமையை உணரும் நேரம் அதுதான் போலும். ஒவ்வொருவரும் வலியுடன் "லீலை!ஆம் லீலை!" என்று மீண்டும் மீண்டும் சொல்வது அதனாலேயே அல்லவா?


திருமூலநாதன்