Monday, July 24, 2017

கற்றலின்பம்


அன்பு ஜெமோ  சார்,
                 விவாதத்தில் வஞ்சப்பெருங்காட்டின் விதை வாசித்த போதுதான் ஒன்று சட்டென்று விளங்கியது, பீமனுக்கு கர்ணன் மீதான கசப்பிற்கான காரணம்.

                   ஆம் துரியன் கர்ணன் சந்திப்பிற்கு முன்பே  பீமன் கர்ணன் சந்திப்பும், பீமன் உமிழும் கசப்பும், வெறுப்பும் நிகழ்ந்தது.ஏனெனில்  தானிழந்த துரியனின் அணுக்கத்தை, தனது இடத்தைப் பெறப் போகிறவன்  கர்ணன்  என்ற பீமனின் உள்ளுணர்வே கர்ணன் மீதான மாறாத வெறுப்பாகிறது. நீர்க்கோலத்தில் கானகத்தில் நகுலசகாதேவர்கள் அருகிருப்பதை உணர்வது வரை பீமனின் உள்ளுணர்வு நாமறிந்த ஒன்றே.       
           வெண்முரசிலிருந்து பெறும் கற்றலின்பம் வாழ்நாள் முழுமையும் தீரப் போவதே இல்லை


சிவமீனாட்சி செல்லையா

உணர்வெழுச்சி

எப்பொழுதும் வெண்முரசு வாசிக்கையில் அதை ஒரு புத்தகத்தில் அலல்துகணினித்திரையில் வாசிக்கும் ஒரு கதையாக இன்றி உணர்வு பூர்வமாகவே வாசிப்பேன். நான் அப்படியே வெண்முரசை நேரடியாக அறிந்துகொள்ளும் எளிய வாசகிதான். பல சமயங்களில்.
அந்தந்த கதாபாத்திரங்களாய் மாறி மாறி உண்ர்வெழுச்சியுடனெ வாசிப்பேன் பின்னர் படித்து முடிந்ததும் அதிலிருந்து விடுபட வெகு நேரமாகும். இன்று ஒரே அத்தியாயத்தில் தமயந்தியாய், குற்ற உணர்விலிருந்த நளனாய்,சேடிப்பெண்ணாய், மாலினியாய்,இளவரசியாய், புஷ்கரனாய், கருணாகரராய் மாறி மாறிக் கொண்டே  வாசித்துக்கொண்டிருந்தேன். அன்னையின் காலில் ஓடி வந்துஇளவரசன் விழுந்து வணங்கும் போது அழத்துவங்கி இருக்க்றென் என்பதை நளன் உணவின்றி இருந்ததை வாசிக்கையில் சொட்டிய கண்ணீரிலிருந்தே அறிந்தேன். இன்று அதிகாலை வாசிக்க துவங்கிய்து, இந்த உணர்வெழுச்சியிலிருந்து விடுபட ஏறக்குறைய மதியமாகிவிட்டது.

லோகமாதேவி

Monday, July 17, 2017

புகைமூட்டம்.ஜெ,
கரவுக்காட்டில் ஒவ்வொன்றும் உருமாறுவதில் பல விந்தைகள் இருந்தாலும் உச்சகட்டம் என்பது முக்தனின் மாற்றம்தான்.அவன் அர்ஜுனன் மேல் பிரேமைகொள்கிறான். அப்படி பிரேமைகொள்வதற்கு அர்ஜுனனிடமிருக்கும் பெண்மைதான் காரணமா? இல்லை இவனிடமிருக்கும் பெண்மை அர்ஜுனன் என்ற ஆணை காதலித்ததா? அவன் கடைசியில் சுபாஷிணியைக் கண்டடைகிறான். அதில் என்ன நிகழ்கிறது? ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய புகைமூட்டம். ஆங்காங்கே உருவங்கள் தெரிகின்றன

மனோகர்

சுபாஷிணி


அன்புள்ள ஜெ

சுபாஷிணி மிக எளிமையான சேடிப்பெண்ணாக வருகிறாள். ஆனால் அவள் ஆசைப்படுவது பாஞ்சாலியாக ஆவதற்காக. அவள் படியிறங்கி விளையாடும்போது மனசுக்குள் பாஞ்சாலியாக ஆகிவிட்டிருக்கிறாள். பாஞ்சாலியாக அவள் அக்கனவுக்காட்டுக்குள் வருகிறாள். அந்த உருமாற்றம் அற்புதமானது. அவள் ஒரு தங்கப்பாம்பாக ஆகிவிடுகிறாள்

அதில் அவளுக்கு 3 கணவர்கள். முதல்வன் முக்தன். அவன் அர்ஜுனன். அவனுக்குள் பெண் இருக்கிறாள். இரண்டாவது நகுலசகதேவர்கள். அவர்கள் அவள் குழந்தைகள். அவள் ஏற்றுக்கொண்டு மேலே செல்வது பீமன். அதாவது சம்பவன். தர்மன் அவள் கணக்கிலேயே இல்லை. சரியா? நான் சரியாகத்தான் வாசிக்கிறேனா?

மகேஷ்

விளையாட்டு.

அன்புள்ள ஜெ

கரவுக்காட்டிலுள்ள விளையாட்டுக்களை நீவி எடுத்துப்புரிந்துகொள்வது ஒரு அற்புதமான மனோவியல்விளையாட்டு. இது இந்நாவலில் அதிகமாக வருகிறது. இது நாவலை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ள உதவுகிறது. வெய்யோன் நாவலில் பளிக்கறைக்குள் பார்ப்பது உதாரணம். அர்ஜுனன் பார்க்கும் மாயக்காட்சிகள் இன்னொரு உதாரணம். இவை மகபாரதத்தில் நடந்தவை நடக்கவிருப்பவை அனைத்தையும் ஒன்றாக்கி ஒரே இடத்தில் காட்சிகளாகக் காட்டிவிடுகின்றன

அருண்குமார்