Thursday, January 5, 2017

உக்கிர கீதை (கிராதம் 67)


   வெண்முரசில் சில கதா பாத்திரங்கள் புதிதாக திடீரென்று தோன்றி  விஸ்வரூபம் எடுத்து  நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொள்ளும்.  அப்படி ஒரு பாத்திரம் உக்கிரன் என்ற மழலைச்சிறுவன்.     அறிமுகமாகும் அந்த விநாடியிலேயே நம் உள்ளத்தை கவர்ந்துவிடுகிறான்.  வண்டியிலிருந்து அவன் தரையில் மட்டுமல்ல நம் மனதிற்குள்ளும் குதித்துவிடுகிறான்.  அவனிலிருந்து ஞானம் பீறிட்டு சொற்களாக வெளிவருகிறது. அதன் காரணமாக அவன் தன் குழந்தைமையை இழந்துவிடுவதில்லை. அவன் சொற்களின் களங்கமற்ற குறும்பு இருக்கிறது, அது உண்மையில் குறும்பே அல்ல. அவை இயல்பானவை. அவன் பேசுவதைக் கவனித்தால் அவன் உண்மையைமட்டும்தான பேசுகிறான் என்பதை கவனிக்கலாம்.  வளர்ந்தவர்களாகிய நாம்தான் உண்மைகளை அலங்கார வார்த்தைகளால மூடி மறைத்து சொல்கிறோம். அது பழகிப்போய்விட்டதால வெறும் உண்மைகள் நம்மை சீண்டுகின்றன.

   “ஐயம் கொள்பவரின் ஐயத்தை உண்மையாக்குவதுதானே சிறந்தது?” என்றான் சிறுவன்.

தேள் நினைக்கும் முன்னரே கொடுக்கு சென்று கொட்டிவிடும் என்பார்கள். இவன் என் தேள்கொடுக்கு” என்றான். “கொடுக்கு இருப்பதனால்தானே அதை தேள் என்கிறோம்?” என்று சிறுவன் கேட்டான்.
நாம் மற்றவரிடம் நாம் எதிர்பார்ப்பதை தேடுகிறோம். அதையே காண்கிறோம். அதனால பலவற்றை நாம் காணாது தவறவிடுகிறோம். அதனால்  நம் பார்வையில் தெரியாது நாம் தவறவிட்ட ஒன்று  ஒரு குழந்தையான உக்கிரனால் காணப்படுகிறது. 
“நீங்கள் அறிந்தோர்” என்று உக்ரன் கைசுட்டி சொன்னான். “எப்படி தெரியும்?” என்று பைலன் சிரித்துக்கொண்டே குனிந்து அவனிடம் கேட்டான். “அறிந்தோர் விழிகளில் ஒரு நகைப்பு உள்ளது. அறியாதோர் எவை கொண்டிருந்தாலும் எங்கிருந்தாலும் விழிகளில் உள்ளது ஒரு பதைப்பு மட்டுமே” என்றான் உக்ரன்.
உக்ரன் “அந்தணரே, ஓர் ஊரார் வருபவர்களிடம் கேட்கவிழையும் முதற்செய்தி என்ன?” என்றான். ஜைமினி “நல்ல மழை, நல்லரசு, வெற்றிகள், வேள்விகள்” என்றான். “இல்லை, அனைவருமே கேட்பது அவர்கள் ஊரைப்பற்றி நாம் எப்படி அறிந்தோம் என்றே. நெடுந்தொலைவிலேயே அவ்வூரைப்பற்றி நம்மிடம் பலர் சொன்னார்கள் என்று நாம் சொன்னால் மகிழ்வார்கள். காட்டுக்குள் ஒளிந்து எவருமறியாது கிடக்கும் சிற்றூர்கூட கண்டடையபப்படவேண்டுமென்றே ஏங்குகிறது” என்றான். “ஆம், உண்மை” என்றான் சண்டன். “நான் எப்போதும் அதைத்தான் சொல்கிறேன்.” வைதிகர் நால்வரும் சிரித்தனர்.

அவன் வார்த்தைகளில் ஞானம் எவ்வித அலங்காரங்களும் இல்லாமல் வெளிப்படுகிறது. அலங்காரமற்றதின் அழகு அதில் பொலிகிறது.
பொருளென்பது ஒரு வெளிப்பாடு மட்டுமே” என்றான் உக்ரன். “அப்பால் கருத்து என்றும் இப்பால் பொருளென்றும் அறிதலில் இயல்பென்றும் அறியமுடியாமையில் முடிவிலி என்றும் தன்னை வெளிப்படுத்தும் ஒன்றின் ஒருமுகம். 

  பாலென நமக்கு கிடைப்பது  பசுவின் உடலெங்கும் முன்னர் குருதியென விரயிருந்ததாகும்.  அதைப்போன்றே பின்னர் வரப்போகும் கீதை வெண்முரசின் பாகங்களெங்கும் பல தத்துவ கருத்துக்களாக,  விவாதங்களாக,  கதை மாந்தர்களின் செயல்களாக விரவியிருகிறது.   கீதை   ஜடப் பொருட்கள்,    குணம்,  தத்துவம் என அனைத்தையும் மூன்று பிரிவுகளில்  வகைப்படுத்தி வைக்கிறது.   வெண்முரசில்    உக்கிரனின் மழலைக்குரலில் ஐம்பூதங்களையும் எப்படி  மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஊர்த்தலைவர் அவனையே நோக்கி சிலகணங்கள் இருந்தார். பின்னர் “இவ்வனல் எதன் வடிவம் என்று சொல்?” என்றார். “குலத்தலைவரே, முதன்மைப் பருப்பொருட்கள் மூன்றே. அனல், நீர், மண். வானம் என்பது பருப்பொருட்களின் இன்மைநிலை. அவ்வின்மையின் நீரோ நிலமோ அனலோ அமைக்கும் அசைவையே காற்று என்கிறோம்” என்றான் உக்ரன். “முப்பெரும் பருப்பொருட்களும் மூன்று முதலியல்புகளின் பருவெளிப்பாடுகள். மாறாநிலையியல்பு கொண்ட நிலம் தமஸ். அதை ஆளும் நீர் சத்வம். அதன்மேல் எரிந்தெழும் அனல் ராஜஸம்.”
பின்னர் மூன்று பெருந்தெய்வங்களும் அந்த வகைப்பாட்டில் இயல்பாக அமைகிறார்கள்.
 நிலமென்று நின்ற நேர்நிலை பிரம்மன். அதில் செயலென்று எழுந்த அனலே சிவன். அமைந்த நீரின் தண்மையே விஷ்ணு.
இப்படி முப்பிரிவாக பிரிக்கப்படுபவை ஒன்றை ஒன்று மறுப்பதில்லை .  ஒன்றில்லாமல் மற்ற இரண்டும் இருப்பதில்லை. அவை ஒன்றை ஒன்று முழுமை செய்துகொள்பவை .  நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் இப்படி முப்பிரிவாக பிரித்தனுப்பப்படுவதுதான். ஒற்றை ஆற்றலை இப்படி முப்பிரிவாக பிரித்துவைத்து மின்சாரமென எடுத்துவந்து பின்னர் நம் வீடுகளில் அவைகளை  நம் மின்சாதனங்களில் இணைய வைத்து அந்த ஆற்றலை, ஒளியென வெப்பமென இயக்கமென நமக்கு வேண்டிய வகையினில் மீட்டெடுத்து பயன்படுத்திக்கொள்கிறோம். பிரம்ம லீலையிலும்  இப்படியே முக்குணங்களு பிரிந்தும் இணைந்தும் இயங்குவதாக கீதை உரைக்கிறது. அதுவே இங்கும் சொல்லப்படுகிறது.

பின்னர் எழுகிறது ருத்திர வேதம்.
நிலத்திலும் நீரிலும் உறைகிறது அனல். தழல்தலென்றும் எரிதலென்றும் வெம்மையென்றும் ஒளியென்றும் இங்கு நின்றிருப்பதை ருத்ரம் என்றது தொல்வேதம். அனைத்தையும் உண்டழிக்கும் அதன் நாக்கு திகழும் சுடலையில் அதை ருத்ரனென்று அமர்த்தினர் முன்னோர். அறிக, செம்மையெல்லாம் ருத்ரம்! குருதி ஒரு ருத்ரன். செங்காந்தள் மலர் ஒரு ருத்ரன். செம்புலத்து மண் ஒரு ருத்ரன். பதினாறு ருத்ரர்கள் ஆள்கிறார்கள் புவியை. அவையோரே, அலகிலாப்பெருவெளியை ஒரு சிதையென்றாக்கி நின்றெரிவது மகாருத்ரம். அறிக மானுடரே, எரிவதெல்லாம் சிவமே!”
   எவ்வளவு பெரிய தத்துவம் அச்சிறு  குழந்தையின் வாயிலாக வெளிவருகிறது.   அலகிலாப் பெருவெளியை ஒரு சிதையென்றாக்கி நின்றெரிவது  மகாருத்ரம்.   ஆம் இந்த மொத்த பிரபஞ்சமே  எரிந்துகொண்டிருக்கிறது.  அனைத்தும்  எரிந்து எல்லாம் மீண்டும் சூன்யத்தைநோக்கி போகின்றன.   இப்பிரபஞ்சம்  அந்த மகா எரிதழலின் தோற்றம் மட்டுமே.  அதன் தீப்பொறிகளே ,  விண்மீன்கள்  சூரியன் சந்திரன் பூமி என வெளிப்பட்டு நிற்கிறது. அதன் எரியே அனைத்து பிரபஞ்ச இயக்கங்களும்.   

அந்தப் பேரெரியின் விளைவான பேராற்றலின் அலைகளால்  பிரபஞ்சம் தோற்றுவித்து இயக்கப்படுகிறது.  அவ்வலைகள்  மின்துகள்லளென சுழன்றாடி அணுக்களெனன அமைகின்றன.  அணுக்களால்  இப்பிரபஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது.  ஆகவே பிரபஞ்சத்தில் காணப்படுபவையெல்லாம்   அலை நிகழ்வுகளே.  நிகழ்வதெல்லாம் எரிதலே.   எரிவதெல்லாம் சிவமே.  அதனால்  எல்லாம் சிவமே,  சிவமன்றி வேறில்லை.
 
தண்டபாணி துரைவேல்