Tuesday, January 10, 2017

இறைதத்துவமும் மனிதத்துவமும் (கிராதம் 79-82)






  
சிலகாலம்  முன்பு பார்க்கப்பட்ட நானும் இன்று பார்க்கப்படும் நானும் ஒருவன்தானா? என் உடல் வளர்ந்தோதளர்ந்தோபெருத்தோசிறுத்தோநிறம் மங்கியோகூடியோ பல மாறுபாடுகளைக் கண்டுவிட்டிருக்கும்இருந்தாலும் அதே உடல்தான் என்கிறீர்களாஎன் முடிகள் தினம் தினம்  உதிர்ந்து வேறு முடிகள் வளர்ந்துகொண்டிருக்கின்றனஎன் நகங்கள்  அதற்குள் பலமுறை வெட்டப்பட்டு இப்போது இருப்பவை புதிதானவைசரி தோலும் உடல் அவயங்களும் அதே தான் என்பீர்கள். ஆனால் அதுவும் தவறுமேல் தோல் தினம் இறந்து உதிர்ந்துகொண்டிருக்கிறது. அதனடியிலிருந்த செல்கள் இன்றைய தோலென தெரிகின்றன. உடல் எண்ணிறந்த செல்களால் கட்டப்பட்டிருப்பது. அந்த செல்கள் இறந்துகொண்டும் புதிய செல்கள் பிறந்துகொண்டும் இருக்கின்றன. அதனால் அவயங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டவை. இப்போது என் அறிவுதான் நான் என்று நீங்கள் கூறக்கூடும். ஆனால் அதுவும் மாறிக்கொண்டிருப்பது நேற்று சரியென்று உணர்ந்த ஒன்று இன்று தவறென புரிந்து மாற்றிக்கொண்டிருக்கிறேன். சில  ஞாபகங்களை மறந்துவிட்டிருக்கிறேன். சில தகவல்களை புதிதாக   சேகரித்து நினைவில் இருத்திக்கொண்டிருக்கிறேன்ஆதலால் என்னை நான் என நீங்கள் எப்படி அறிகிறீர்கள்?   இதை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். என்னை நீங்கள் ஒரு தத்துவமாக ஆக்கிக்கொண்டிருக்கிறீகள். என் பொதுவான பண்புகளைஎன்னில் வெளிப்பட்ட  அறிவின் மேல் நீங்கள் கொள்ளும் விமர்சனத்தைஎன் உடல் வடிவை, அடிக்கடி நான் வெளிப்படுத்தும் என்   பாவனைகளின் தொகுப்பைஒரு செயலுக்கு இப்படி நான் எதிர்வினை செய்வேன் என்று நீங்கள் கொண்டிருக்கும்  ஊகத்தை எல்லாம சேர்த்து அந்த தத்துவத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை  அந்தத்  தத்துவம்தான் நான். அது  நிலையானது அழியாதது அதிக மாற்றத்திற்கு உள்ளாகாதது. நான் இறந்த பிறகுகூட இந்த தத்துவமாக நான் உங்களிடம் உங்கள் நினைவில் இருப்பேன்


      
இப்படி நாம் ஒவ்வொரு மனிதனையும்  ஒரு கருத்துருவாகத்தான் நாம் தொகுத்துவைத்திருக்கிறோம்.   இப்படி பலநூறு ஆண்டுகள் முன் வாழ்ந்த ஒருவரை நாம் அவரின் தத்துவ உருவைக்கொண்டு  மிக நெருக்கமானவராக உணர்கிறோம்அப்படிப்பட்டவர்களை நம் சொந்த உறவாக,   வழிகாட்டியாக, தலைவராககுருவாக, வழிபாட்டுக்குரிய தெய்வமாக என நம் வாழ்வின் முக்கிய அங்கமென ஆக்கிவைத்திருக்கிறோம். அந்த தத்துவ உருவை யாரேனும் மாற்றி அதில்  நாம் காணும் உச்சத்தை குறைக்கமுற்பட்டால் அதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. கடுமையாக எதிர்க்கிறோம்.


    
நெடுங்காலம் முன்னிருந்த ஒருவரின் தத்துவ உருவையே அதற்கு பிறகு வாழ்ந்த ஒருவர் கொண்டிருப்பரென்றால் காலத்தில்  தொலைவிலிருந்து பார்க்கும் நமக்கு அவர்கள் இருவரும் ஒருவரென்றே தோன்றுவதில் வியப்பில்லைஅது ஒரு வகையில் சரியும் கூடஅந்த இரண்டாமவர் முதல்வரின் இயல்பான நீட்சி, மறு பிறவி, அவதாரம் அல்லது அவரே இவர் என நாம் கொள்வது தத்துவார்த்த முறையில் சரியல்லவாஇதன் காரணமாக ஒரு குரு பரம்பரையில் அனைவரும்  ஒரே பெயர் கொண்டிருப்பது நம் இந்திய மரபில் வழக்கமாக இருக்கிறதுஅகத்தியர், துர்வாசர், போன்ற முனிவர்கள், சித்தர்கள், இறப்பின்றி நெடுங்காலம் இருந்ததாக கூறப்படுவதை  நாம் இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்


     
முனிவர்கள், மாமனிதர்கள்  மட்டுமல்ல தெய்வங்களையும் இம்முறையில் நாம்  நம் காலத்துக்கு அழைத்துவரமுடியும் எனத் தோன்றுகிறதுதெய்வம் என்பது  ஒரு சில பண்புத்தொகையின் உச்சம். தாய்மை, மற்றும்  அநீதிக்கெதிரான சீற்றங்கொள்ளும் பண்பின் உச்சமாக அன்னை பார்வதியை, செல்வசெழிப்பை அடைவதின்  உச்சத்தை திருமகளாக, அறிவு கலைஞானங்களைப் பெற்றிருப்பதின் உச்சத்தை கலைமகளாக நாம் அறிந்து வழிபடுகிறோம்.   இதைப்போன்று ஒவ்வொரு தத்துவத்தின் பண்பின் செயல் திறனின் வழி  அடையும் உச்சம்அதாவது அத்திசையில் இருக்கும்  முடிவிலிஒரு தெய்வமென ஆக்கப்படுகிறது.  


  
  
சில நேரங்களில் ஒரு பண்பின் உச்சத்தை நாம் காண நேரிட்டால் அதற்கான தெய்வம் அங்கே தோன்றியிருப்பதாக நாம் உணர்கிறோம். சகதியில் உழன்று கொண்டிருக்கும் ஒரு சாதாரண  தாய்ப்  பன்றி தன் குட்டியைக் கவ்விச் செல்லும் நாயை மோதி நசுக்கிக்கொன்று தன் குட்டியை மீட்டு வருவதைக் காணும் ஒருவர்  அங்கே அன்னை காளி என்கிற தெய்வம் இறங்கி வந்ததாக உணர்ந்து கைதொழுகிறார். ஏனென்றால் அந்த செயலில் தாய்மையின் உச்சம் தென்பட்டது. அது நமக்கு அந்தப்  பண்புக்கான தெய்வத்தை நினைவூட்டுகிறதுஇப்படி கருத்துருவாக இருக்கும் தெய்வத்தின்  கூறுகள்  உச்சங்கள் இன்றைய மனிதர்களில் தென்படும்போது அவர்களில் அந்தத் தெய்வம் ஒளிர்வதாக  நாம் உணர்கிறோம்.  


   
     
இப்படி மாமனிதர்களின் இருப்பு  அவர்களின் வழித்தோன்றல்கள், அல்லது சீடர்கள் வாயிலாக தொடரப்படுவதை  விஷ்ணுபுரத்திலேயே நமக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறதுகாசியபர்  என்ற முனிவர் தன் இருப்பை  இவ்விதம் பல நூறு ஆண்டுகள் தொடர்வது சொல்லப்பட்டிருக்கும்.    இராமர் காலத்து ஜாம்பாவன் மற்றும் முனிவர்கள்  மகாபாரத்திலேயும் வரும் அதீத நிகழ்வுகள்  வெண்முரசில் நம்பத்தகுந்தவையாக இம்முறையில் எடுத்துரைக்கப்படுகிறது. இன்று வெண்முரசில்  நாம் காணும் காளனும் காளியும் அந்தச்  சிவனும் பார்வதியும் அல்ல என்று எவராலாவது கூற முடியுமா? அவர்கள் கொண்டிருப்பது அந்தத் தெய்வங்களின் அதே தத்துவ உருவுகளைசிவனின் தத்துவம் மேலும் சடையன் என எரியன் என மேலும் பல உருக்கொண்டு அங்கு  இருக்கின்றது.   விநாயகர்  மற்றும்  முருகனின் தத்துவ உருக்களையே  கொம்பனும் குமரனும் கொண்டிருக்கின்றனர் என்பதால் அவர்களே அந்தத் தெய்வங்களாகி விடுகின்றனர்இதைத் தவிர்த்து வேறு என்ன கைலாயம் நமக்கு தேவை.   இந்தக் கைலாயமே நமக்கு மேலும் நெருக்கமானதாகவும் இனிமையானதாவும் தென்படுகிறது. சிவனும் பார்வதியும் அம்மை அப்பனாக  தன் பிள்ளைகளோடு நம் கண்ணெதிரே உடலும் உயிரும் கொண்டு உலவவிட்டு நமக்கு பேரின்பம்  அளிக்கிறது வெண்முரசுஇதைப் படிக்கையில்பணிக சிவம்பணிக சிவம் என நம் நெஞ்சம் அந்த அனலுருவோனை போற்றிப் பணிகிறது.


தண்டபாணி துரைவேல்