Sunday, January 15, 2017

பாசுபதம்



ஆதலின் கணம் வாய்த்த அபூர்வ தருணம் காளனின் தாண்டவத்தை வாசிக்கையில் சித்தித்தது. ஒரு கணம், அர்ஜுனன் கொண்ட அசைவு என்னிலும் நிகழ்ந்தது. மிகச் சரியாக ஸ்ரீனிவாசன் சாரும் இறையாதல் என இதையே சொல்லியிருக்கிறார். புனைவின் உச்ச பட்ச சாத்தியமென்றே இதைக் கருதுகிறேன். அர்ஜுன் அடைந்த பாசுபதம் என்பது என்ன? 

இருமை அழியும் நிலையே பாசுபதம். மீண்டும் கருவுக்குள் சென்று, கருவாகும் முன்னமே இருந்த பார்த்திவமாக ஆகும் நிலை. அந்நிலையிலே உள்நுழைந்த ஆணவத்தை அகற்றிய நிலை. இருப்பென்றே ஆன நிலை. இருப்பே இன்மையும் ஆகும் நிலை. அதையே காளன் தன் தாண்டவத்தின் மூலம் நிறுவுகிறான். அதை அம்மக்களின் அசைவோடு அசைந்து, அசைவாகி, அந்நடனமும் ஆகி, அதுவும் இல்லாதொழியும் அனுபவமே அர்ஜுனன் பெற்ற பாசுபதம். காளனின் உடல் வேறு உள்ளம் வேறு அல்ல. அவன் உள்ளம் நினைத்து உடல் செயலாற்றவில்லை. எனவே தான் ஊர்த்துவ தாண்டவமாடி சுழல்கையில் அவன் விழியினின்றும் மறைகிறான். அங்கே காலம் இல்லை. அவனும் காலத்தில் இல்லை. அவனுடன் இணைந்து நடனமிடும் அர்ஜுனனும், அக்குலத்தவரும் அகாலத்தில் அசைகிறார்கள். இக்காலமின்மையே பாசுபதம். அடிமுடியின்றி ஆழத்தையும், அகலத்தையும் சூடி நிற்கும் நிலையே பாசுபதம். அதை வார்த்தைகளால் அன்றி ஆதலாக உணர வைத்த கிராதமும் பாசுபதம் தான்!!!

அருணாச்சலம் மகராஜன்