Sunday, January 22, 2017

அறுமரபில்..






பாசுபதத்தில் இருந்து  காபாலிகம், காளாமுகம், வாமம், மாவிரதம், பைரவம் என்று ஐந்தாக பிரிந்து அவை மேலும் இருநிலையாலும் ஒருநிலையாலும் பிரிந்து விரிந்துச்செல்கிறது என்பதை சுட்டி முதன்மையான ஆறுசைவத்தை கீழ்கண்டவாறு விளக்குகின்றார் ஆசிரியர் ஜெயமோகன்.

//காலப்பேருருவன் என அச்சொல்லை விரித்தவர் பைரவர். தன்னை ஒறுத்து எஞ்சுவதே அது எனக் கொண்டவர் மாவிரதர். இங்குள அனைத்தும் அன்றி பிறிதே அது என உணர்ந்தவர் வாமர். இருளுருவெனக் கண்டவர் காளாமுகர். இறப்புருவென எண்ணுபவர் காபாலிகர். இப்பசுவை ஆளும் பதி என முன்னுணர்ந்தவர் பாசுபதர். அறுவகை அறிதலாக நின்றுள்ளது அது.//

கிராதம் நாவல் சிவத்தின் இந்த அறுவகை அறிதல்களை வண்ணமாக வடிவாக சித்திரமாக சிற்பமாக உயிரும் உடலும் கொண்ட மானிடரூபமாக செய்துக்காட்டுகின்றது. கிராதம் காட்டும் சிவசொருபங்களைப்பார்க்கும்போது அவர்கள் யாரோ எவரோ அண்டமுடியதவர்கள் அல்ல அவர்கள் இதோ நாம் நிற்கும் மண்ணில் நம்மோடு ஒருவராக நின்று கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலக்கும் உரியவர்களாக நிற்கிறார்கள் என்று காட்டுகின்றது. அவர்களை நம்போன்றவர்கள் என்று எண்ணும் அதே கணத்தில் நம்மைத்தாண்டி பிரபஞ்சமாய் விரிந்தவர்கள் என்றும் கைக்குவிக்க வைக்கிறத கிராதம்.

வேதம்கற்று கற்றவேதத்தின் ஒளிவடிவாய் எரியோம்பி வாழும் அத்ரி மகரிஷி நெஞ்சத்தில் ஒரு இருள் எழுகிறது. விளக்கின் கீழ் இருள் என்பதுபோல் வேதம் விளையும் உள்ளதில் எழும் இருள் ஆணவமாய்  மெய்மையின் எதிர்திசையில் நின்று அவரை அசைத்துப்பார்கிறது. ஆணவ இருளில் மூழ்கி மெய்மையின் ஒளியை தவரவிடும் அத்ரியால் மெய்மைவிளை நெற்வயலாகும் வேதம் இருள்விளையும் முள் காடாகிறது. அந்த காட்டில் உலவும் பிரமன் சொல்லின் வடிவாகிய தன் சக்தி கலைவாணியை விட்டு, மேதாவை கூடி நெறி இழக்கிறான். மெய்மை அழிந்து எங்கும் ஆணவ இருளே நிறைகிறது. அந்த ஆணவஇருளில் தன்னையும் மறந்தநிலையில் நிற்கும் பிரமனை அழிக்க ஆதிசிவனால் உற்பத்தியாகும்  பைரவன் தன் இருவிரலால் பிரமன் தலையைக்கிள்ளி தன்னை ஆணவத்தின் இருளில் மூழ்கடித்துக்கொள்கிறான்.

அத்ரி முனிவரில் இருந்து பிரமனுக்கும், பிரமனில் இருந்து பைரவனுக்கும் அழியாமல் தொடர்ந்துக்கொண்டு இருக்கும் ஆணவம் அழியவில்லை, ஆனால் ஆணவத்தை ஏந்தும் பாதிரங்கள் மாறுகின்றன. கொலைபழியால் ஆணவத்தால் பிடீக்கப்பட்டு நிற்கும் பைரவன்  தான் கொண்ட பழியும் ஆணவமும் அழிவதற்கு அதற்கு அப்பால் நிற்கும் ஆதிசிவத்திடம் சென்று தனது  பழி ஆணவம் விடுபட வழிகேட்கின்றான்.

தன்னைமறந்து தெய்வத்தை இகழ்ந்து பிரம்மத்தின் எல்லையை கடந்து பித்தாகி நிற்கும் நிலை ஒன்று அனைவருக்கும் வாய்க்கிறது. அதை அறிந்து தெளிவதே மேதமை அதை அறியாதநிலையில் இருந்தால் மேதமை  வெறும் பித்து என்பதை பைரவன் உணர்கின்றான். இரந்து அலைந்து தன் குருதியை தானே உண்டு   தன்சுவை அறிகின்றான். தன் மேதமையை தானே உண்டு ருசிக்கவேண்டும் அப்போது மேதமை பித்தாவது இல்லை. தன் ஆணவத்தை தானே உண்டு சுவைக்கவேண்டும் அப்போது ஆணவம் பழியாவது இல்லை என்று காட்டி நிற்கிறது பைரவசிவம்.

கைக்கபாலத்துடன் இரந்துண்டு வாழும் பைரவசிவம் தன் குருதியை தானே உண்டு முடிக்கும் போது தன் கைக்கபாலம் கழன்றுவிழ தூய்மையாகி நிற்கிறது.

தன் குருதியை தானே உண்பதற்கு முன்புவரை பைரவசிவம் மேற்கொள்வது மாவிரதம். தன்குருதியை தானே உண்டு தூய்மையாகி பழியற்று ஆணவம் அற்றுநிற்பது பைரவசிவம்.

தேவதாருக்காட்டுக்குள் நுழையும் பைரவசிவம் அங்குள்ள அனைத்து உயிருக்குள்ளும் இருக்கும் சீவனின் ஒளிவெளிக்குள் மறைந்திருக்கும் இருளை வெளிக்கொண்டு வருகின்றது. ஒளிக்கண்டு ஆனந்தப்பட்ட தாருகாவனத்து சீவன்கள் தங்களுக்குள் உள்ள இருள்கண்டு நோவும்போது அதற்கெல்லாம் அப்பால் என்று பைரவசிவம் நிற்கிறது. அதை அத்திரிமுனிவரின் பத்தினி அன்னை அநசுயா காண்கிறாள்.

பைரவன் காட்டாளனாக காமுகனாக வேதத்திற்கு புறம்பானவனாக தெரியும்போது அன்னை அநசுயா அவனை தன் குழந்தை என்று சொல்கின்றாள். அவன் மான்மழுமதி சூடிய  சிவன் என்கிறாள் அதன் பின்னே அத்ரி அவனை ஆதிசிவன் என்று உணர்ந்து அவன் கால்பட்டு உருண்ட கல்லை கிராதசிவமாக வழிபடுகின்றார். பைரவசிவம் அநசுயாவின் மூலமாக வாமனசிவமாக எழுகின்றது.
தங்களுக்குள் உள்ள இருளை வெளிக்காட்டி அதன் மூலம் தங்களை சிறுமைசெய்து, அந்த இருளை வென்று செல்லும் வாமனசிவமாகி நின்று செல்லும் பைரவசிவத்தை அபிச்சாரவேள்வி செய்து அழிக்க நினைக்கும் தாருகாவனத்து ரிஷிகளின் வேள்வியில் இருந்து எட்டுதிசையானைகள் எழுந்து பைரவனை கொல்லச்செல்கின்றது. திசையானைகளின் தோல் உரித்து ஹஜசம்காரமூர்த்தியாக நிற்கிறான் வாமனசிவமாகி மேல் எழுந்த பைரவசிவம்.

உலகம் முழுவதும் மண்டிக்கிடக்கும் இருள் திசையானைகளாய் தோன்றுகின்றன, அவற்றின் தோல்உரித்துப்போர்த்தும்போதே காளமுகசிவம் தோன்றுகின்றது. காதுக்கு ஒளியாய், கண்ணுக்கு ஒளியாய், வாயிக்கு சுவையாய், நாசிக்கு மணமாய், உடலுக்கு உணர்வாய் இங்கு மானிடன் அறியும் அனைத்து சுவைகளிலும் படர்ந்து கலந்து இருக்கும் இருள். அது கொலைகொள்ளும் கொம்புள்ள யானை அதை கிழித்துபோர்த்தி இருளில் அறியும் மெய்மையென காளமுகசிவம் படைக்கப்படுகிறது.

பிரபஞ்சவடிவாக விளங்கும் ஆதிசிவத்தில் இருந்து எழுந்துவரும் பைரவசிவம், மாவிரதசிவமாகி, மாவிரதசிவம் வாமசிவமாகி, வாமசிவம் காளாமுகசிவமாகி கிளைத்துபரவுவதை கரிபிளந்தெழுதல் என்று காட்டுகின்றார் ஆசிரியர். கரிபிளந்தெழுதல் என்ற தலைப்பின் வழியாகவே மானிடமெய்மையின் உள்ளே உள்ள கறுமையை அல்லது இருளை கண்டு அடைந்து அதற்குள் உள்ள மெய்மை என்ன என்பதை இந்த சிவசொருபங்கள் காட்டுகின்றன.

பைரவசிவம், மாவிரதசிவம்,வாமனசிவம்,காளமுகசிவம் ஆணவத்தின் பிடியில் உள்ள இருளை அறிந்து மேல் எழ வழிகாட்டுகின்றது. கபாலிகசிவம் ஆணவத்திற்கு முன்பு உள்ள அச்சத்தை வெல்வதை காட்டுகின்றது.    தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து வைசயம்பாயணன் உலகத்தை குடும்பமாக எண்ணி வெளியேறும் நாளில் எந்ததிசையில் செல்வது என்று திக்கற்று நிற்கும் நிலையில் சந்திக்கும் பிச்சாண்டவர் சொல்லும் சத்ருஞ்சயன் கதையில்வரும் பிச்சாண்டவர் கபாலிகசிவமாக எழுகின்றார். விலகல் ஐயம் வெறுப்பு நீங்கி தன் காதைதானே சுட்டு சமைத்து உண்ணும் இடத்திற்கு வந்து நிற்கும் பிச்சாண்டவர் சத்ருஞ்சனையும் விலகல் ஐயம் வெறுப்பு கடந்தநிலைக்கு அழைத்துச்சென்று கபாலிகசிவமாக மாற்றுகின்றார். மனிதனிடம் உள்ள அச்சத்தை வெல்ல சொல்கிறது கபாலிகம். அதனால் அ்து இறப்பை அஞ்சாதே என்கிறது. எதிலிருந்தும் விலகாதே என்கிறது. எதையும் ஐயப்படாதே என்கிறது. எதையும் வெறுக்காதே என்கிறது.  // அச்சத்தை அளவையாக்கி அவன் இப்புவியை அறிகிறான். எனவே அவன் அறிவதெல்லாம் அச்சம் ஒன்றையே.”// கபாலிகம் இப்புவியை அச்சமின்மையால் அறிகின்றது.


விலக்கம் ஐயம் வெறுப்பு இன்றி அச்சம், ஆணவம் இன்றி எல்லோரும் ஓர் நிரை எல்லோரும் ஒர் குடும்பம் எல்லோரும் ஒர் உயிர் எல்லோருக்கும் ஓரானந்தம் என்று கயிலைமலை ஊரும் குடியும் மக்களும் காட்டப்படும் இடத்தில் பாசுபதசிவம் நிற்கிறது.


கிராதம் நாவலில் அர்ஜுனன் அஸ்திரங்கள் பெறுவதைக்காட்டும் நிகழ்வுகளை சதையாகக்கொண்டால் பாசுபதம் பைரவம் மாவிரதம் வாமனம் காளமுகம் கபாலிகம் என்னும் சிவச்சொருபங்களை எலும்பாகக்கட்டிவைத்து  வடிவம் கொடுக்கிறது நாவல்.


காளிகக்காட்டில் காளியும் காளையனும் கொள்ளும் காதல்வழியாக உயிர்களின் உள்ளத்தில் உள்ள இருமைகள் அவர்களை முன்னுக்கு பின்னாக அலையவிட்டு தன்னைத்தான் நோக்கி தெளியவைத்து பிறக்கவைத்து அவர்களை காதலில் மாதொருபாகனாக எழச்செய்து உலகை சிவசக்தி சொருபமாகக்காட்டுகிறது கிராதம்


தேடித்தெளிதல், படைத்துதெளிதல், நோக்கித்தெளிதல், விளையாண்டுதெளிதல் என சீவக்கூட்டத்தை அனல் எழுப்பி மெய்மைகாட்டும் சோதிச்சிவம். சிவத்திற்கு முன்பு ஒரு அச்சம், ஒரு ஆணவம், ஒரு அறியாமை, ஒரு இருள். ஓரு மரணம் தடையாக சுவராக இருக்கிறது அதை கடந்து சிவத்தை அடை என்கிறது கிராதம்.


கிராதம் நாவலில் அர்ஜுனன் மெய்மை அறிகின்றான். வாசகன் சிவத்தின் மெய்மையை அறிகின்றான். 


ராமராஜன் மாணிக்கவேல்.