Saturday, February 11, 2017

தாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)


     
 தீப்பெட்டி இல்லாமல்  தீ மூட்டுவது கடினமானதுதான். என்றாலும் இரண்டு கற்களை உரசி தீப்பொறி வரவைத்து, அதை சருகு போன்ற ஒன்றில் படவைத்து அதை எரிய வைக்கலாம்.  அதில் மெல்லிய காய்ந்த குச்சிகள் அப்புறம் சற்று கனமான குச்சிகள் என தீயை மூட்டிவிட்டால் அது இப்போது எதையும் எரிக்கும் திறன் பெற்று விடும். அது தீண்டும் பொருட்களெல்லாம எரித்து சாமபலாக்கிக் கொண்டிருக்கும்.   சில பொருட்கள் எளிதில் தீப்பற்றி எரியும் சில பொருட்கள் நீண்ட நேரம்  தீயில்  காய்ந்து வெப்பமான பிறகுதான் எரிய ஆரம்பிக்கும்.  அப்படி எழும் தீ ஒரு வனத்தையே எரித்துச் சாம்பலாக்கிவிடுவதுண்டு. ஆகவே ஒரு தீயை மூட்டும்  ஒவ்வொருவரும் அது அணைந்து போவதற்கான வழிகளை ஏற்படுத்தவேண்டியது மிக முக்கிய கடமையாகும். காடுகளில் உலா செல்வோர் இப்படி பொறுப்பில்லாமல் மூட்டிய தீயை அணைக்காமல் விடுவதால் சிலசமயம் பெரிய வனப்பரப்பு எரிந்து போவதற்கு காரணமாகிவிடுகிறது.

    
வஞ்சம் என்பதும் தீ போலத்தான். இருவர்களுடைய அகங்காரம் உரசிக்கொள்கையில் அது பற்றிக்கொள்கிறது. ஒருவர் செய்யும் ஏதோ ஒரு செயல் இன்னொருவரை பாதிக்கச்செய்கிறது.  அந்தச்செயலின் விளைவுகள் தீப்பொறிகள் என பாதிக்கப்பட்டவரை சீண்டுகின்றன.  அதன் பாதிப்பு அவர் சகிப்புத்தன்மையின்  எல்லையை தாண்டி இருக்குமானால் அவர் கோபம் கொண்டு எதிர்வினையாற்றுகிறார். அந்த எதிர்வினை மற்றொருவரால் ஏற்றுக்கொள்ளாத பொழுது ஒருவருக்கு அல்லது இருவருக்கும் இடையில் ஒர் வஞ்சம் பிறக்கின்றது. தனக்கிழைக்கப்பட்ட தவறு பெரிதாக இருந்தால்தான் சிலர் வஞ்சம் கொள்வார்கள்.  சிறிய தவறுகளுக்கே சிலர்களுக்கு வஞ்சம் எழும்.  அது இருவர்மேலும் தீயென நின்றெரிகிறது.  முழுமையாக தீர்க்கப்படும் வஞ்சம்,  முடிக்கப்படும் பகை என்பது மிக அரிது. அதில் ஒருவர் இறந்துபோனால்கூட அவர் சந்ததிகளிடம் அந்த வஞ்சம் வளர்கின்றது. குடும்பங்களுக்கிடையில்,  இனங்களுக்கிடையில்,  மதங்களுக்கிடையில்  பெரிய வன நெருப்பென வளர்ந்து பெருகுவதும் உண்டு. இந்த வஞ்ச நெருப்பில் எரிந்து சாம்பலாகிய நாடுகளை,  இலட்சக்கணக்கான மக்களை வரலாறு கண்டிருக்கிறது.
     
 
இந்த வஞ்ச நெருப்பின் அழிப்பதன் கடினத்தை சிலர் அறிகிறார்கள். அது எப்படி நட்பை அழிக்கிறது, உறவை பிரிக்கிறது அமைதியைக் குலைக்கிறது என்பதை அறியும் அவர்கள் அதை தடுப்பதெப்படி எனத் தெரியாமல் தவிக்கிறார்கள். அந்தத் தவிப்பு தருமனிடமும் பின்னர்   மற்ற சகோதர்களுக்கிடையில் வெளிப்படுவதை  வெண்முரசு வெளிப்படுத்துகிறது. ஜெயத்ரதன் திரௌபதியை கடத்துவது படு பாதகமான செயல். அதற்கு  பீமன் அளித்த தண்டனை சரியானது என்று தான் நாமும் நினைக்கிறோம்.  அறம் நிலைக்க தண்டனை தேவை. அறமீறல்களைச் செய்பவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவது இன்னொரு அறமீறல். தீங்கு செய்பவர்களை தண்டிக்காமல் விடுவதால் மற்றவர்களுக்கும்  தீங்கு செய்வதில் இருக்கும் தயக்கத்தைப் போக்கி  உலகில் அதிக அறமீறல்கள் நடக்க  அது வழிகோலும். ஆகவே ஜெயத்ரதனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அவசியமானது.     
   
 
 இந்தக் காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு இழைக்கும் அநீதிக்கு தண்டனை வழங்க அரசு இருக்கிறது. அது பாதிக்கப்பட்டவரின் சார்பாக தண்டனையை குற்றம் செய்தவருக்கு வழங்குகிறது. அதன் காரணமாக வஞ்சம் பரவி வளராமல் தடுக்கப்படுகிறது.  ஒரு அரசு,  குற்றத்துக்கான தண்டனையை மட்டும் தருவதாக நான் நினைக்கவில்லை. அது பாதிக்கப்பட்டவரின் சார்பாக வஞ்சம் தீர்க்கிறது என்றும் கொள்கிறேன்.  ஆகவே குற்றம் செய்த ஒருவருக்கு இதுதான் தண்டனை என்று நீதிமன்றம் ஆய்ந்து  தீர்ப்பளித்தபின் அதை குறைத்தல் அல்லது தண்டனைக்காலத்திற்கு முன் விடுவித்தல் என்பது எவ்வகையிலும் சரியல்ல. அது பாதிக்கப்பட்டவருக்கு இழைக்கப்பட்ட அநீதியென ஆகிறது. அப்படி ஒரு முடிவெடுக்கும்போது பாதிக்கப்பட்டவரின் கருத்தை கேட்பது அவசியம் என்றும் கருதுகிறேன். ஆனால் தருமனோ அல்லது பீமனோ வேறு என்னதான் செய்திருக்கமுடியும்?   ஜெயத்ரதனை பொதுவான வேறொருவரின் நீதிக்குமுன் நிறுத்தி அவர் மூலமாக தண்டனையை அளித்திருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் திருதராஷ்டிரனிடம் தான் இந்தப் பிரச்சினையைக் கொண்டுபோயிருக்கவேண்டும்.  ஒருவேளை அதை ஒரு குடிமகனாக அரசனாக இருந்த  தருமன் செய்திருக்கக் கூடும்.  ஜெயத்ரதனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அப்படிப்பட்டதல்ல.  
 
இது   அவனைச் சார்ந்த அவன் உறவினர், நண்பர்களுக்கு பெரும்  வஞ்சத்தை பற்றிக்கொள்ளவைக்கும் என்பதை உணர்ந்த தருமன் அதற்காக கவலைப்படுதலும்   நியாயமானதுதான். இதன் தொடர் விளைவுகளாக பெரும் அழிவுகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்பது எளிதில் யூகிக்கக் கூடியதே. ஒரு குடும்பத் தலைவனாக ஒரு நாட்டின் அரசனாக இதை எதிர்நோக்கவேண்டிய பொறுப்பு தருமனுக்கு இருக்கிறது.  ஆனால் அரச அமைப்புகளிடம் முற்றிலும் நம்பிக்கையிழந்த காட்டாளனாக இருக்கும்  பீமன் இதைத்தான் செய்வான். தன்னைக் கடத்த முற்படும்போது திரௌபதி அவன் சங்கறுப்பேன் என்று  கூறுகிறாள்.  அவளிடம் ஆயுதம் இருந்தால் அதை செய்தும் இருப்பாள். அதைப்போலவே அர்ச்சுனன் நகுலன் சகாதேவன் முதலில் மனதில் நினைத்திருப்பர்.  ஆனால்   ஜெயத்ரதனுக்கு தண்டனை அளிக்கப்பட்ட பிறகு அவர்கள் உள்ளத்தில் எரிந்த வஞ்சத்தீ தணிந்து தன் இயல்பான குணங்களுக்கு திரும்புகின்றனர். ஜெயத்ரதன் பிடிக்கப்பட்டான் என்ற செய்தியை அறிகையிலேயே தருமன் முதலானோருக்கு அவன் மீதான் வஞ்சம் தணிந்துவிடுகிறது.  
 
குருதிதோய்ந்த ஜெயத்ரதனின் உடல், அவன் துன்பம்,  திரௌபதியின் தாய்மையை தூண்டிவிட்டது. ஆகவே அவள் வஞ்சம் தணிகிறது. அர்ச்சுனனுக்கு ஒருவன் தோற்றுப்போதலே ஒரு தண்டனை எனநினைப்பவன். ஆகையால் ஜெயத்ரதன்  பிடிபட்டு கைதியாக நிற்கும்போதே அர்ச்சுனனின் வஞ்சம் தணியத்தொடங்குகிறது.  ஆனால் பீமனைப் பொறுத்தவரையில் ஒருவன் உடலுக்கு அளிக்கப்படும் தண்டனையே தண்டனை.  ஆதலால் ஜெயத்ரதனை  அத்தகைய நிலைக்கு ஆளாக்குகிறான். அதுவும் நம்மால் புரிந்துகொள்ளமுடிவதே. ஆயினும் இனி ஜெயத்ரதனிடம், அவனைச் சார்ந்தவர்களிடம் இதன் காரணமாக வஞ்சத் தீ சீறிப்பெருகி எரியும். அதன் காரணமாக ஏற்படப்போகும் அழிவுகள் இனி காலஏட்டில் எழுதப்படும் என்பதை வெண்முரசு  இன்று கோடிட்டுக் காட்டுகிறது.  
 
தண்டபாணி துரைவேல்