Wednesday, February 8, 2017

சண்டனின் காலம்




மாமலர் சண்டன் புறட்டும் காலஏடுகள் பகடிக்காக புறட்டப்படுவதுபோல் இருந்தாலும். காலத்தை புறட்டுவது என்னும் படிமம்தான் எத்தனை நுணுக்கமானது.
மானிடவாழ்க்கை கடிதம்போல் தட்டையானது இல்லை புத்தகம்போல நீளம் அகலம் உயரம் ஆழம் கொண்டது. எண்ணம் என்னும் காற்றால் அது முன்னும் பின்னும் சலசலத்து புறண்டுக்கொண்டே இருக்கிறது.
காலஏடுகள் புறண்டுக்கொண்டே இருப்பதால்தான் நினைவில் இருந்து கனவுக்கும், கனவில் இருந்து நினைவுக்கும், கண்ணீரில் இருந்து சிரிப்புக்கும், சிரிப்பில் இருந்து கண்ணீருக்கும், நன்மையில் இருந்து தீமைக்கும், தீமையில் இருந்து நன்மைக்கும், உயர்வில் இருந்த தாழ்விற்கம், தாழ்வில் இருந்து உயர்விற்கும் உயிர்கள்  சென்று சென்று வந்துக்கொண்டு இருக்கிறன.. கால ஏடுகள் இந்த இருவெளிக்குள் புரண்டு புரண்டு எழும்போதும் விழும்போதும் ஒரு மையம் மெய்மையாய் வாழ்க்கையாய் பிணைத்து மாலையாக்குகிறது.
காலஏடுகள் புறண்டுவிழுந்ததில் சக்கரவர்த்தி சக்கரவர்த்தினியாக இருந்த பாண்டவ பாஞ்சாலி இன்று கோமதிநதிகரை சாலமரக்குடிலில் எளிய குடியினராக வாழ்கிறார்கள். இப்படியே இருப்பது சலிப்பாகவும், நித்தம் நித்தம் புதுமலர் பூப்பதுபோல வாழ்க்கை வண்ணமும் வாசமும் நிறைந்ததாகவும். மலர்கள் மலர்வதுபோல வாழ்க்கை இயல்பானதாகவும் இருக்கிறது. 
அர்ஜுனன் வருகிறான் என்பதை காலஏட்டை புறட்டிச்சொல்லிவிட்டு முண்டன் உண்ணச்சென்றுவிட்டான். அவன் சொன்னப்படியே அர்ஜுனனும் வருகின்றான். அந்த கணத்தின் ஏடு ஒன்று அந்த கணத்தில் புறள்கின்றது. அதனால் எற்படும் மகிழ்வும் உவகையும் கண்ணீரும் கனமும் காதலும் நாணமும் சுவையும் சுகமும் நிறைந்து அக்கணம் இருக்கிறது.
அர்ஜுனன் வருகிறான் என்பதை அறியும் தருமன் தந்தையாகி தனக்குள் தான் என காலம் புறட்டும் ஒவ்வொரு படியிலும் விழுந்து உருண்டுச்சென்று அர்ஜுனனை பார்க்காமல் கண்ணீர் உகுத்து தனது பாசத்தை நிறைவுச்செய்கிறார்.
நகுலனும் சகதேவனும் ஊர்திரும்பும் தந்தையைக்காண பஸ்நிருத்தத்திற்கே ஒடும் குழந்தைபோல் மாறிவிடுகிறார்கள்.
திரௌபதி தான் அன்னை என்னும்  நிகழ்காலத்தோற்றமும் சக்கரவர்த்தினி என்ற நினைவுக்காலத்தோற்றமும் மறைய உள்ளமே வடிவெடுத்த கன்னியென வந்துநிற்கிறாள். 
சொந்தங்களை சுவைகளில் அழுத்தியே மூழ்கடித்து ஆனந்தப்படும் பீமன் எப்போதும்போல இக்காலத்திலும் தேனுடன் வருகிறான்.
பாண்டவர்கள் குடிலில் காலபுத்தகத்தின் ஏடுகள் இப்போது இப்படித்தான் புரண்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் காலத்தின் ஏடுகளை அதன்போக்கில் புரளவிட்டு சுழலும் முண்டன் அர்ஜுனன் வரவுக்கு பின்னால் சொல்லும் சொல் கால ஏட்டின் இயல்பை காட்டுகிறது. இரக்கமின்மையைக்காட்டுகிறது அல்லது அதன் தர்மத்தைக்காட்டுகிறது.
 // “விஜயரின் வில்லுக்கு வேலை வந்துவிட்டிருப்பதைக் கண்டேன்” என்றான் முண்டன் கைதூக்கி. “அம்புகள் பறக்கும் ஒரு பெரும்போர்!” என்று கூவினான்.
அவன் குரல் மறையும்படி தடதடவென கூரைமேல் குரங்குகள் விழும் ஓசை கேட்டது.//
காலத்தின் குரல் சிலநேரங்களில் நம்காதுக்கு கேட்காமல் இருப்பது சுகமாகத்தாதன் இருக்கிறது. கேட்டு இருந்தால் நலமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டா? சுகத்தையும் நலத்தையும் காலம் கண்டுக்கொள்வதில்லை. அதன்வேளை புரண்டுக்கொண்டே இருப்பதுதான். அதுவே அதன் தர்மம். 
ராமராஜன் மாணிக்கவேல்.