Friday, February 10, 2017

ஜனனீ ஜ்வாலாமுகீ



அன்புநிறை ஜெ,

இன்றைய குருதிக் குமிழிகள் கண்ணீரை வரவழைத்தது.

எத்தனையோ அதிதீவிரமான போர்க்காட்சிகள் வெண்முரசில் கண்டிருப்பினும் பீமனின் மனக்குமுறலும் வெறியும் யுகப்பழி கொள்ளப்போவதன் முன்னோட்டமே பதறச்செய்தது; அதனினும் அதைக் கண்டதும் திரௌபதியின் கண்கள் கலங்கி நீரொளி கொள்ளும் தருணத்தில் உணர்ச்சி மீறி கண்கள் பொங்கியது. அவள் முற்றிலுமாக அன்னையென பரிதவித்து ஜயத்ரதனை ஒரு தாயின் மகனெனக் கூறி பணிவிடை செய்யும்போது தோன்றியது - அவள் உண்மையில் வேண்டியது இதைத்தானே? 
 
"சிற்றில்பிறந்த சிறுகுடிப்பெண்ணுக்குக் கூட இழிவு நேர்ந்தால் சினந்து வேல்கொண்டு எழ ஆண்மகன் ஒருவனேனும் இருப்பான். எனக்கு எவருமில்லை. பெண்ணென நான் தேடுவது எக்கணக்கும் இன்றி எனக்கென வந்து நிற்கும் ஓர் ஆண்மகனை. இயலாமையின் உச்சத்தில் ஒருவர் அங்கேயே சங்கறுத்துக்கொண்டு செத்துவிழுந்திருந்தால் அடங்கியிருக்கும் என் அழல்" என்றுதானே கிருஷ்ணனிடம் சொன்னாள்.

ஆனால் இன்றைய அவளது கண்ணீரும் புரிகிறது. பெண் என்பவள் எப்போதும் அன்னையே. துரியனை பலமுறை அடித்து வீழ்த்தும் திருதராஷ்டிரரோ, பீஷ்மரோ அல்லது இன்றுபோல பீமனோ அன்றெழுந்து அவையில் துரியனாதிகளை தண்டிக்க முற்பட்டிருந்தால் அன்றே அடங்கியிருக்க்கூடும் இவ்வனல். அன்னையெனக் கடந்திருக்கவும் கூடும். அல்லல்பட்டு 'ஆற்றாது' அழுதகண்ணீர் அது.

இன்றைய கண்ணீர் தாய்மையின் பரிதவிப்பு மட்டுமல்ல பீமனின் மீதான அன்பு.அவளை அவளுக்காய் நேசிக்கும் அதற்கென தெய்வங்களையும் எதிர்க்கத் துணியும் காட்டாளனின் மீது கட்டற்று எழும் அன்பே எதிரியை மன்னிக்கும் கண்ணீராய் வழிகிறது. 

அவள் கனவுகளில் வருபவன் பார்த்தனாய் இருக்கலாம் - கனவுகளை மெய்ப்படுத்துபவன் வீமனே. விழைவு பார்த்தன் எனில் வரம் பீமன். காற்று சிறுதீயை அணைக்கும்; பெருந்தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்யும். 

ஜனனீ ஜ்வாலாமுகீ!! 

அன்புடன்,
சுபா