Monday, February 13, 2017

காலத்தின் விளையாட்டு

அன்புள்ள ஜெ வணக்கம்.

மாமலரின் சுழற்சிச்சொல்விளையாட்டில் மொத்த மகாபாரதத்தையும் சுழலவிட்டு விளக்குகின்றீர்கள். அருமை. உங்களது கடினமான உழைப்பின் கனிகள் ஞானத்தேன் நிறைந்தவை. உங்கள் ஞானத்தைப்பெற்றுக்கொள்ளாத விக்கிபீடியா உலகுக்கு உரிய ஒரு ஞானவிளக்கை மறைக்கின்றதே தவிர அதனால் அது ஒளிவீசுவதை தடுத்துவிடமுடியாது. வாசநெஞ்சங்களுக்காக ஏற்றப்படும் மணிவிளக்கு வெண்முரசு. காலத்தின்பீடத்தில் என்றும் ஒளிரும். 

மாமலரை மிக எளிதாக மலரவைக்கின்றீர்கள் அதன் வாசமும் வண்ணமும் ஒளியும் மிக இயல்பாக உள்ளொளி பாச்சுகி்ன்றன.
ஆற்றல் கூர்மை(திறமை) நிமித்திகம்(காலம்)  விரைவு  வழியாக  முன்னின்று  அறம் உலகை பேணுகின்றது.

உலகில் சீற்றமும் அழிவும்  அறத்தின் முன்னும் பின்னும் நின்று அறத்தை முன்னேத்தள்ளியும் பின்னே இழுத்தும் நிலைகுலையச்செய்கின்றன. அதனால் அறம் தர்மசங்கடத்தை அனுபவிக்கிறது. அறத்தால் அறம் அடிபடுகின்றது.  

ஆணவம் வஞ்சம் நட்பாக விழைவு உறவாக வெற்றுப்பெருமிதமும் பற்றும் துணைவர அறியாமைக்கலந்து வளர்கிறது அறத்திற்கு எதிரான எதிர்அறம்.

அறத்தின் முகமாக தருமனும், தருமனின் அகமாக  அறமும், முகமும் அகமுமாக நிற்க. ஆக்கத்தின் முகமாக கண்ணனும், கண்ணனின் அகமாக ஆக்கமும் நிற்க. மற்று ஒவ்வொருவரும் அவர் அவர் முகமும் அகமுமாக எழுந்த வந்து காட்சிக்கொடுக்கிறார்கள். முகம் இல்லாமல் அகம் இல்லை. அகம் இல்லாமல் முகம் இல்லை.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.-என்னும் திருக்குறள் உருகொண்டுவந்து மாமலரில் மலர்ந்து எழுந்த சுழற்சிச்சொல்லாக விளையாடுகின்றது.

மனிதன் என்பவன் முகத்தின் வடிவமாகத்தான் வந்து உலகில் பிற்கிறான். பிறக்கிறான் என்பது தோன்றுகின்றான் என்பது ஆகும், ஆனால் அகத்தின் வடிவமாகத்தான் அவன் உலகில் வளர்ந்துக்கொண்டு இருக்கிறான். வளர்ந்துக்கொண்டு இருத்தல் என்பது வரலாற்றில் வாழ்தல் என்பது ஆகும்.

மாமலரை இங்கு விட்டுவிட்டு முதற்கனுக்குள் சென்றால். ஜனமேஜயன் செய்யும் நாகர்குலத்தை அழிக்கும் வேள்வி நடக்கிறது. அந்த வேள்வியல் அந்தணன்போல் கலந்துக்கொள்ளும் நாகர்குலக்மணிக்கொடி மானசாதேவியின் புதல்வன் ஆஸ்திகன் நாகர்குலத்தைக்காக்க தட்சகன் உயிரைக் காணிக்கையாகக்கேட்கின்றான். ஜனமேஜயன் தான் வஞ்சிக்கப்பட்டதாய் எண்ணி அறம்மீறியச்செயல் என்று சினக்கிறான். ஆஸ்திகனை அவமதிப்பதை வரலாறுப்பேசட்டும் என்கிறான். கண்ணீர்விடுகின்றான் அப்பொழுது ஆஸ்திகன் உலகுக்காகத்தான் இதை செய்தேன் என்று கூறுகின்றான். //அறம் என்ற சொல்லை அறியாத எவருமில்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை//  என்றும் மொழிகின்றான். இறுதியாக ஆஸ்திகர் செய்தது சரியா தவறா என்று தீர்ப்பு கூறவரும் வியாசர் அழிவின் விளிம்பில் நிற்கும் தட்சகனை நோக்கி கூறுவது.

நீ இல்லையேல் என் காவியமில்லை. இம்மண்ணில் வாழ்வும் இன்பமும் இல்லை. உனது தர்மத்தை நீ செய்வாயாக. உன் குலம் முடிவிலாது பெருகட்டும். இவ்வுலகமெங்கும் காமமும் அகங்காரமும் பொலியச்செய்வாயாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என மகாவியாசர் ஆசீர்வதித்தார். 

வியாசர் இந்த தீர்ப்பை வழங்க அறத்தின் சிடுக்குகளில் ஊறி தெளிந்த வியாசனம் மனம் கண்டுக்கொண்டது இன்றைய மாமலர் சுழற்சிச்சொல்.

அறம் தனது ஆற்றலோடு கூர்மையோடு நிமித்திகத்தோடு விரைவோடு சீற்றத்திற்கும் அழிவிற்கும் நடுவில் நிற்கிறது என்றால். ஆணவம் வஞ்சத்தோடு பற்றோடு அறியாமையோடு பெருமிதத்தோடு விழைவோடு நிற்கிறது. அறம் ஆணவம் இரண்டுக்கும் மையத்தில் ஆக்கம் நின்று இரண்டையும் பொதுவாக வளர்க்கிறது.

ஆணவம் இன்றி வளர்ந்த அறமும் இல்லை, அறம் இன்றி நின்ற ஆணவமும் இல்லை. ஆக்கம் என்றும் அதை அப்படித்தான்   வைத்து இருக்கிறது. அறமும் ஆணவமும் காலத்தின் கோலத்தில் உலக வாழ்க்கையின் ஓட்டத்தில் தடம்புரண்டுவின்றன. ஒன்று மற்றதின் மேல் ஏறி பயணம் செய்கிறது. எதுவும் எதன்மீது ஏறமுடியும். எதுவும் எதனுடனும் பயணம் செய்யமுடியும் என்பதுதான் உலகவாழ்க்கை. எந்த முகம் எந்த அகத்தில் ஏறுகின்றதோ அந்த அகமே அதன் முகமாக மாறுகின்றது எனவே முகத்தின் கண்களாக அகமே ஆகிவிடுகின்றது. எனவே எதற்கும் முன்னால் கண்ணில்லை. 

கர்ணன் காலத்தால் வஞ்சிக்கப்பட்டு குடியிலியாகும்போது வஞ்சம் கொண்டு எழுகின்றான். வஞ்சம் கால ஓட்டத்தில் காதலை இழக்கச்செய்யும்போது காதலியை வஞ்சத்தால் அவமதிக்கின்றான். அவமதித்தப்பின்பு வஞ்சம்வடிவடைய அறத்தைத்தொடர்கின்றான். அறத்தை தொடரும் அவனை நட்பென்னும் விழைவுப்பற்றிக்கொள்ள அதனுடன் பற்றும் பற்றாக அறத்தையும் தொடர்ந்து விழைவு என்றுமட்டும் ஆகின்றான்.

கர்ணன்போலவே கர்ணனின் தாய் குந்தியும் காலத்தால் வஞ்சிக்கப்பட்டு சீற்றம் அகமாக நிற்கிறாள். ஐந்துப்பிள்ளைகள் பெற்று சக்கரவர்த்தினியாகி சீற்றம் குறையும் குந்தி வரணாவதம், சூதாட்டம் என்று வாழ்க்கையின் சிடுக்குகளில் மாட்டி பிள்ளைப்பற்று என்ற இடத்திற்கு வந்து இறுதியாக மருமகள் அவமானத்தால் வஞ்சத்தில் வந்து நிற்கிறாள்.

தருமனின் அகமாக நிற்கும் அறம் காலத்தின் கோலத்தால் சலிப்புற்று விழைவு அடைந்து சகுனியாகி சூதாடி அனைத்தையும் இழந்து அறம் அறியாமையை சூடிக்கொண்டு நிற்கின்றது.

ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அகத்தை சூடி புதுப்புது சுழற்சியை வாழ்வில் கொள்வது வாழ்க்கை. வாழ்க்கையை வளர்க்க வந்த ஆக்கம் தானும் அந்த சுழற்சியில் மாடிக்கொண்டு ஆக்கம் அதன் எதிர்திசையாகிய அழிவை தாங்கி ஆக்கத்தை எல்லாம் அழித்துப்பார்க்கிறது. அது உலகை சமன் செய்கிறது.

ஆக்கி அழிப்பது என்பது உலகை சமன் செய்வதுதான் அதனால் அது  மகாமாயை. மகாமாயையும்  அறம் அடித்து தள்ளிவிட்டு தான் அந்த இடத்தில் நின்றுக்கொள்கிறது என்பது இறுதி உண்மை. .

சுழற்சிச்சொல் விளையாட்டில் இறுதியாக ஆணவத்தோடு துரியோதனனும், விழைவோடு வந்த சகுனியும் பற்றுடன் நிமிதத்தோடும் தெறிக்கின்றார்கள். கூர்மையோடு வந்த அர்ஜுனன் சீற்றத்துடன் தெறிக்கிறான். ஆற்றலோடுவந்த பீமன் வஞ்சத்தோடு தெறிக்கிறான். பெருமையோடுவந்த பீஷ்மர் அறியாமையோடு தெறிக்கிறார்.

அறத்தின்மீது அறியாமை ஏறலாம். அறம்  எதனுடனும் இருக்கலாம். அறம் ஆக்கத்தோடும் இருக்கலாம் அழிவோடும் இருக்கலாம் இறுதியில் அறம்மட்டுமே இங்கு இருக்கமுடியும் என்னும் சொல்விளையாட்டுத்தான் மானிடர் வாழ்வின் இறுதிமுடிவு.

முண்டன் என்னும் குள்ளன் விளையாடும் சுழற்சிச்சொல் விளையாட்டு. தருமத்தின் முன் காலம் விளையாடும் உலகவிளையாட்டு என்னும் படிமம் அர்த்தம் நிறைந்தது. காலம் விளையாடும் சுழற்சிசொல்விளையாட்டில் காலம் வரலாாக அடிபடுகின்றது அலறுகின்றது அஞ்சுகிறது அறியாததுபோல் இருக்கிறது. 

அன்புள்ள ஜெ வாழ்வின் எத்தனை பெரிய மானிடமனச்சிக்கலை மாமலரில் சுழற்சிச்சொல் விளையாட்டாகக் காட்டுகின்றீர்கள். நன்றி

ராமராஜன் மாணிக்கவேல்.