Thursday, June 1, 2017

நீர்க்கோலம் – அலையன்னம்


வெண்முரசின் மிக அழகான அத்தியாயங்களுள் ஒன்று என நீர்க்கோலத்தின் அலையன்னம் பகுதியைக் குறிப்பிடலாம். வழமையான நள சரித்திரத்தில் அவனது அரண்மனை அன்னம் மூலமாக அவன் தமயந்தியைப் பற்றி அறிகிறான். அன்னம் பேசப்போகும் அத்தருணம் வெண்முரசில் எப்படி வெளிப்படப் போகிறது என குறுகுறுப்புடன் காத்திருந்தேன். அதன் அழகான பதில் இன்று கிடைத்தது. நாஞ்சில் சார் கம்பராமாயணத்தைப் பற்றிக் கூறுகையில் வான்மீகிக்கும் கம்பனுக்குமான கால இடைவெளி, அக்காலங்களில் வந்த காவியங்கள், கலைக் கூறுகள், சமூக மாற்றங்கள் ஆகியவையே கம்பன் வான்மீகியிடம் வேறுபடும் அல்லது மேம்படும் இடங்களுக்கு காரணம் என்றார். அதையே இன்று வெண்முரசில் கண்டேன்.

ராஜா ரவி வர்மாவின் மிக அழகான ஓவியங்களுள் ஒன்று ‘அன்னமும் தமயந்தியும்’. அந்த ஓவியத்தை, அதிலிருந்த அன்னத்தை இன்று நளனுடன் உரையாட விட்ட உங்கள் கற்பனை அபாரம். அந்த அன்னத்தை வெளிக்கொண்டு வந்தது நளன் அணிச்சுனையில் நீந்திய நிஜ அன்னம். நளன் காதல் கொள்ளும் அத்தருணம் மிக அழகாக வெளிவந்துள்ளது. இறுதியாக ‘எத்தகைய அலைகளிலும் உலையாது ஒழுகும் நேர்த்திஎன அன்னத்தின் இயல்பை அவளின் இயல்பாகக் கொண்டு வந்ததையும், அந்த அன்னம் என்பதை ஒரு தொன்மமாக மறு ஆக்கம் செய்ததையும் எண்ணி எண்ணி ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் புன்னகை அகலவில்லை!!!


அருணாச்சலம் மகராஜன்