Monday, June 26, 2017

உருமாற்றம்







நாம் புறத்தோற்றத்தை மாற்றிக்கொள்கையில் அதுவல்ல நாம் என்று உள்ளிருப்பது முரண்டுகிறது. நான் பிறிது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நம்மை சூழ்ந்திருப்பவை அனைத்தும் நம் தோற்றமே நாமென நம்மிடம் மீளமீள கூறுகின்றன. நமது இருப்பும் இடமும் அவ்வாறு வரையறுக்கப்படுகின்றன. என்ன நிகழ்கிறதென்று நாம் அறியாதிருக்கையிலேயே நம்முள் இருப்பது மாறிவிடுகிறது. பிறகெப்போதோ ஒருமுறை அது நினைவுகளில் இருந்து தன் முந்தைய வடிவை கண்டெடுத்து அதை கனவென அணிந்து திரும்பிப்பார்க்கையில் துணுக்குறுகிறது, எப்படி மாறினோம் என்றுஎன்றான்.

ஒருவன் தன் உருவை மாற்றிக்கொள்கையில் அவனுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை சிறப்பாக இவ்வரிகள் விளக்குகின்றன. உரு மாறுதல் என்பது மாறு வேடம் பூணுவதை மட்டும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என நினைக்கிறேன். திருமணம் முடிந்தவுடன் கணவன் என, மனைவி என ஆதல்கூட உருமாறுதல்தான். அவன் இதுவரை இருந்த உருவை விட்டு இன்னொரு உரு கொள்கிறான். சாதாரண தொண்டனாக இருக்கும் ஒருவனுக்கு எதாவது ஒரு தலைமைப்பதவி கிடைக்கும்பாது அவன் உரு மாறுகிறான். ஒருவன் புதிய வேலையில் சேர்கையில், அல்லது புது பதவியில் அமர்கையில், வேறு நாட்டுக்கு செல்கையில், தந்தை தாயென ஆகுவதில், இல்லறம்விட்டு துறவறம் கொள்கையில், அதிகாரம் கொள்வதில், அடிமைப்படுவதில் என அனைத்திலும் உரு மாறுதல்கள் நிகழ்கின்றன. ஒருவன் தன் கொள்கையை தத்துவத்தை மாற்றிக்கொள்கையில்கூட உரு மாறுதல்கள் நிகழ்கின்றன. சிலவற்றில் உருமாறுதல் மிக வெளிப்படையாகத் தெரியும், சிலவற்றில் மிக நுண்மையாக இருக்கும். ஒன்றை விரும்புகையில் ஒன்றின்மேல் வெறுப்பு கொள்கையில், ஒன்றைப் புதிதாக அறிந்துகொள்வதில் எல்லாம் சன்னமான உருமாறுதல்கள் ஏற்படுகின்றன. உருமாறுதல்களில் ஒருவன் தான் உடை அணிவதில் மாற்றம் கொள்கிறான், நடப்பது பேசுவது சிரிப்பது பழகுவதுஆகிய அனைத்து பாவனைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. வெளியில் செய்யப்படும் உரு மாற்றம் உள்ளத்திலும் உள்ளத்தில் செய்யப்படும் உரு மாற்றம் வெளியிலும் மாற்றங்களை விளைவிக்கிறது. ஒரு சிறு மரத்தின் ஒரு கிளையை பிடித்து இழுக்கையில் மறு கிளையும் சாய்வதைப்போல இது நிகழ்கிறது. ஒருவர் தன்னை மறைத்துக்கொள்ள வெளியில் மட்டும் எற்படுத்திக்கொள்ளும் மாற்றம் முழுமையான உருமாற்றமாகாது. கூருணர்வுள்ள எவர் ஒருவரும் அதை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். ஆக மற்றவர் அறியாத வகையில் உருமாற உள்ளமும் அந்த வேடத்திற்கேற்ப மாற வேண்டும்.

வெண்முரசில் அரச வாழ்வு வாழ்ந்த பாண்டவர்களும் திரௌபதியும் இப்போது சாமான்ய மனிதர்களாக உருமாறி வாழ வேண்டும். அதற்கு அவர்கள் உள்ளம் இசைந்துகொடுக்கும் உருக்களை அவர்கள் பூணவேண்டியது அவசியமாகிறது. சகாதேவன் இயல்பிலேயே ஞானத்தின் பாதையில் செல்பவன். அவனுக்குள் இருக்கும் ஞான வேட்கைக்கேற்ப அவன் ஞானியென உருகொள்வது மிகச் சரியான ஒன்றாக அமைகிறது. அடுத்து நகுலன் குதிரைகளின்பால் ஈடுபாடும் அதற்கான ஞானமும் அமையப்பெற்றவன். ஆகவே குதிரை பராமாரிப்பவனாக உருக்கொள்வதைவிட சிறந்ததாக அவனுக்கு வேறு ஒன்றும் அமையமுடியாது. அர்ச்சுனன் சிறு வயதிலிருந்தே பெண்களின் உறவில் திளைத்தவன். பெண்மையை மிக நுண்மையாக அறிந்தவன். அவன் பெண்ணென வேடம் பூணுவது மிகப்பொருத்தமானது. ஆனால் ஆணுடல்கொண்ட அவனால ஒரு பெண்ணுடலை தன் உருவாகக் கொள்வது இயற்கையில் நடக்க முடியாதது. ஆகவே அவன் இருபாலினவனாக தன்னை உருமாற்றிக்கொள்கிறான். மற்றவர்களைப்போல் அல்லாமல் அவன் இந்த உருவை ஏற்கெனவே அணிந்தவன். இந்த உருவைத்தான் அவன் அணிவான் என நாம் எதிபார்க்கக்கூடியதுதான். பீமன் அடுனையாளனாக மல்லனாக ஆவதுதான் ஒரே வழி. ஒருவகையில் பார்த்தால் அவன் உண்மை உருவே இதுதான் அல்லவா. இத்தனை நாட்களாக அவன் அரச வாழ்வில் இருந்தது தான் அவனின் மாற்றுரு இப்போதுதான் அவன் உண்மை உருவுக்கு திரும்புகிறான் என்று தான் சொல்ல வேண்டும். தருமனுக்கு நூல்களை ஆய்ந்துகொண்டு அவ்வப்போது அறவுரைகளை, அறிவுரைகளை சொல்லிக்கொண்டிருப்பதைவிட வேறு என்ன பொருத்தமான மாற்றுரு இருக்க முடியும். பாண்டவர் ஐவரும் கொள்ளும் இந்த மாற்றுருகள் அவர்கள் உள்ளத்தில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் இணையுருக்கள்தான். ஆகவே இவை மிகப் பொருத்தமானதாக அமையப்போவதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் திரௌபதி தன் பேராளுமையை எப்படி தன்னுள் ஒளித்துக்கொண்டு மாற்றுரு கொள்ளப்போகிறாள் என்பது தெரியவில்லை. அவள் கொள்ளப்போகும் மாற்றுரு ஒன்றுதான் மிகச் சிரமமானதாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

தண்டபாணி துரைவேல்