Saturday, July 1, 2017

நீர்க்கோலம் - குருதிச் சோறு




நீர்க்கோலம் பலவகையிலும் வெண்முரசு என்னும் பெருநாவலின் மீச்சிறு (miniature) வடிவம் தான். வெண்முரசு நாவல் வரிசையில் இதுவரை வந்த பெரும்பாலான மறு ஆக்க உத்திகள் இந்நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்துப் பார்ப்பது ஒரு ‘ஜாலியான’ விளையாட்டாக இருக்கக்கூடும். வெண்முரசையும் நன்றாக உள்வாங்க உதவக் கூடும்.

நேற்றைய(27/06/2017) குருதிச் சோறு அத்தியாயம் படித்தவுடன் தோன்றியது அடுத்தது திரௌபதியின் நகர் புகுதல் தானா என்பது. ஏனென்றால் பிரயாகையில் திரௌபதியின் அறிமுகத்தின் முன் நடக்கும் நிகழ்வுகளை இது நினைவுபடுத்தியது. பிராயாகையில் திரௌபதி முதன் முதலில் நமக்கு அறிமுகமாவது ஒரு ஆலயத்தில். அந்த ஆலயத்தில் பலிச் சோறு வைக்கப்பட்டிருக்கும். அந்த அத்தியாயத்திற்கு முன்னர் தான் நவகண்டம் அளித்த ஒருவனின் குருதியில் பிசைந்த சோற்று உருண்டைகள் உருவாக்கப்பட்டு ஐந்து அன்னையர் ஆலயங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கும். ஒரு வகையில் அன்னையின் கொற்றவை ரூபத்தைக் குறிக்கும் குறியீடாக, பிற்கால குருஷேத்ரத்தின் குறியீடாக அந்த அத்தியாயம் அமைந்திருக்கும்.

இங்கே நளன் சீர்ஷரின் தலையை வெட்டியதும், அவரது குருதி சிந்திய உணவை அனைவரும் உண்டதும் அதற்குப் பிறகு கலி நிஷாத நாட்டில் ஆடிய ஆட்டத்தின் ஆரம்பம் தானே. பிரயாகையிலும் இந்நிகழ்வுக்குப் பிறகு தானே துரியனின், கர்ணனின் மாறுபாடுகள் நிகழ்ந்தன. இத்தகைய இணைவுகளே நீர்க்கோலத்தை மேலும் அழகாக்குகின்றன.


அருணாச்சலம் மகராஜன்