Tuesday, August 15, 2017

கண்ணனை அணுகஅர்ஜுனனிடம் இருக்கும் பெண்மை எப்படி வந்தது என்று இன்று எதையும் அறியாமல் நுட்பமாக உணர்ந்து முக்தன் சொல்லும் இடம் அற்புதமானது. ’அவரிடம் இவர் கொள்ளும் காதலே இவரில் பெண்மையென வெளிப்படுகிறது.’ என்கிறான்

எங்கோ எவருக்கோ மனதின் ஆழத்தில் அவன் நாயகி பாவம் கொண்டிருக்கிறான். ஆகவேதான் பெண்ணாக ஆக முடிகிறது. அது மிகநுட்பமானது. முதல்கோபிகை அர்ஜுனன் தான் என்று பாகவத மரபிலே சொல்வார்கள். அந்தளவுக்கு ஜீவாத்மா பரமாத்மாவை அணுகுவதுபோல கண்ணனை அணுகவேண்டுமென்றால் நாயகிபாவம்தேவை

ராகவன்

நீர்க்கோலம் – சுதேஷணையும் பானுமதியும்துரியன் அவையில் பெண்ணிழிவு செய்யப்பட பின் பானுமதியின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அவளிடம் திரௌபதி பேசியிருந்தால் என்ன சொல்லியிருக்கக் கூடும்? இதை திரௌபதி சுதேஷ்ணையிடம் உரையாடும் அறக்கூற்று பகுதியின் மூலம் உய்த்துணரலாம்.

ஆணவம் அற்றோர் அறத்தில் நிற்பதில்லை. நான் அறத்தோள் என்று உணரும் ஆணவமே தெய்வங்களுக்கு உகந்த உணர்வு” என்றாள் திரௌபதி. “அரசி, தலை எழுந்து நிற்பதற்குத் தேவையானது முதுகெலும்பு. இந்த ஆணவத்தில் ஒரு துளியேனும் உங்களிடம் இருந்திருந்தால் இந்நகர்மேல் கீசகனின் நிழல் இப்படி கவிந்திருக்காது.”” – இதையே தன் மகள் முன்னிற்க தான் எங்கோ நின்ற கிருஷ்ணையின் அன்னை பானுமதியிடம் இதையே கூறியிருக்கக் கூடும்.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்

சூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.வெண்முரசு மிகப் பெரும் விளைவுகளை, அவமானங்களை,, அழிவுகளை ஏற்படுத்திய இரண்டு சூதாட்டங்களை விவரிக்கின்றது ஒன்று தருமன் ஆடியது இன்னொன்று நளன் ஆடியது. இருவர் ஆடிய சூதாட்டங்களுக்கிடையே இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் தம்மை சூதில் வல்லவர்கள் என நினைத்திருந்தவர்கள். ஆனால் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டவர்கள். இருவரும் தோற்றது தங்கள் உறவினரிடம். இருவரும் அந்த ஆட்டத்தை தங்களின் நல்லெண்ணத்தினால் அனைவருக்குமான நன்மையை கருத்தில் கொண்டே ஆடினர். தமக்கும் தம்மைச்சார்ந்தவருக்கும் பெரும் இழிவும் அவமானமும் ஏற்படுத்திக்கொள்ளும்படி அத்தோல்விகள் அமைந்தன. இதுவரை வாழ்ந்த மேலான வாழ்வுக்கு நேர் எதிராக கீழான வாழ்வை வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சூதாட்டத்தின் பாதகமான விளைவுகளை வெளிப்படுத்தும் புராணங்களாக இவை விளங்குகின்றன.


சூதில் எல்லாவற்றையும் இழந்த சிலரை நாம் பார்த்திருப்போம். ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனும் விளையாடுவது என்பது மட்டுமல்லாமல் இப்போது அது பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது. பரிசுச் சீட்டு வாங்கும் ஒருவன் தான் அறிந்திராத பல்லாயிரம் நபர்களுடன் சூதாடுகிறான். சூதுகளமும் பல்வேறு விதங்களில் வேறுபட்டு நிற்கின்றன. அதில் வைத்தாடப்படும் பகடைக்காய்கள் பற்பலவாக இருக்கின்றன. குதிரைகள், விளையாட்டு வீரர்களின் வெற்றிகள், வணிக நிகழ்வுகள், உயர்பொருட்களின் விலைகள், வியாபரத்தின் பங்குகள் பெறும் மதிப்பு என ஒவ்வொரு நாளும் அவை பெருகுகின்றன.

ஆனால் இப்படிச் சூதில் சிலர் மட்டும்தான் ஆடுகிறார்கள் என நினக்கிறோம். ஆனால் ஒவ்வொரு மனிதனும் சூதாடுபவன்தான். அதுவும் ஒவ்வொரு நாளும் அவன் சூதாடிக்கொண்டிருக்கிறான். அவன் வாழ்வே ஒரு சூது களம் என இருக்கிறது. சூது என்பதின் வரையறை என்ன? சூது என்பது ஒரு பலனை வேண்டிதான் இப்போது கொண்டிருக்கும் ஒரு பலனை பணயம் வைத்து ஒரு செயலை அது நிறைவேறும் என்பதற்கான நிச்சயமில்லாத நிலையில் செய்யும் செயலெனக் கொள்ளலாம் அல்லவா? குழந்தை பாதுகாப்பாய் இருக்கும் தன் கருவறையில் இருந்து வெளிவந்தால் நலமுடன் இருப்போம் என்ற பலனை கருதிக்கொண்டு பிறந்து வருவதையே ஒரு சூதாட்டமெனக் கொள்ளலாம். மகிழ்ச்சியைத் தேடி தந்தை ஆதரவாக பற்றியிருக்கும் பிடியகற்றி செல்லும் சிறுவர் போவது ஒரு சூது அல்லவா? தம் எதிர்கால வாழ்வு நலனுக்கென பலவற்றை தவிர்த்து ஒரு துறையை தேர்ந்தெடுத்து பயிற்சிகொள்ளுதல், தன் இல்லத் துணைவரென ஒருவரைக் கைபிடித்தல் என அனைத்து நிகழ்வுகளிலும் நிகழ்வது சூதாட்டம் அல்லவா?


சாதாரணமாக ஒரு சாலையைக் கடப்பதில், ஒரு வாகனத்தில் பயணிக்கையில், ஏதோ ஒரு உணவகத்தில் எதோ ஒரு உணவை உண்பதில், எவர் ஒருவரையோ உறவென நேசம் கொள்வதில், எவர் ஒருவரையோ நமக்கு எதிரானவர் என்று பகைகொள்வதில் எல்லாம் நாம் சூதாடிக்கொண்டிருப்பதையே குறிக்கின்றன. பெரும்பாலான சூதுகளில் நமக்கு எதிராக விளையாடுபவர் யாரெனத் தெரியாமலேயே நாம் இந்த ஆட்டத்தை விளையாடிக்கொண்டிருக்கிறோம். சில சமயம் நாம் வெற்றி என நினைத்துக்கொள்வது தோல்வியென ஆகிறது. தோல்வியென அறிந்தது நன்மை பயப்பதாக மாறுகிறது. நம் எதிர் நின்று சூதாடுபவன் நாமறியாதவன். அவன் நமக்கு எதிராக அமைக்கும் பகடைக் காய்கள் நாமறியாதது. அந்தக் காய்களை நகர்த்தும் விதிகளை அவனே அமைத்துக்கொள்கிறான். அவன் எதை ஆடினாலும் அதுவே சரியானது என்று வாதிடுபவன். அவனுடனான இந்தச் சூதில் ஒவ்வொரு நாளும் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

நம் வாழ்வே ஒரு சூதுக்களன் என ஆகிவிட்டதால் நாம் சூதை எப்படி திறன்பட ஆடுவது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சூதின் முக்கிய அம்சமே அதில் வெற்றி நிச்சயமில்லை என்பதுதான். ஆதலால் ஒரு சூதாட்டத்தில் இறங்குவதை கூடுமானவரை தவிர்க்கப்பார்க்கவேண்டும். வேறு வழியின்றி சூதில் இறங்கினால் அதை முழு மனதோடு ஆட வேண்டும். வெற்றி ஒன்றே இலக்கு. அந்த வெற்றியை பெறுவதற்கு எதை நாம் பணயம் வைக்கிறோமா அதற்கு நாம் வருந்துபவராக இருக்கக்கூடாது.

எதிராடுபவர் தோல்வியடைவதற்கு வருத்தப்படுபவராக நாம் இருக்கக்கூடாது. எண்ணித் துணிந்தபின் வெற்றிக்கான பாதையில் ஏற்படும் இழப்புக்களை ஏற்றுக்கொள்பவராக இருக்கவேண்டும். தோல்வி அடைவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளன என்பதை மனதில் இருத்தி அதற்கான முன்னேற்பாடுகளுடனும் இருக்க வேண்டும். எதிராடுபவனின் நல்லெண்ணத்தை நம்புதல் மிகப்பெரிய தவறென ஆகிவிடும். முக்கியமான ஒன்று நமக்கு எதிராக ஆடுபவனின் திறன் மட்டும் நமக்கு எதிரானது அல்ல. தற்செயலாக விளைபவை இவ்விளையாட்டில் பெருமளவு பாதிப்பை விளைவிக்கக்கூடியவை. அதனால் எதிராளி திறன் குறைந்தவன் அதனால நமக்கு நிச்சயவெற்றி என இருப்பது மிகத் தவறு. விளையாடும்போது தம் மனநிலையை சிதறவிடக்கூடாது. சூதின் போக்கு தமக்கு பாதகமாக இருக்குமென்றால் நம் அகங்காரத்திற்கு இடம் கொடுக்காமல் அதை மேலும் தொடராமல் வெளிவருவதற்கான உள உறுதி கொண்டிருக்கவேண்டும்.


நளனும் தருமனும் சூதுகளத்தில் இவ்வாறு ஆடவில்லை என்பதைக் காணலாம். இருவரும் தாம் நிச்சயம் வெற்றியடைந்துவிடுவோம் என்ற மனநிலையோடு ஆடத் துவங்குகிறார்கள். எதிர்த்து ஆடப்போகும் புஷ்கரன் மற்றும் துரியோதனன் திறனற்றவர்கள் என்ற அலட்சியத்தோடு இருந்தவர்கள். அவர்கள் தோல்வியின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று யூகித்து அதற்கான முன்னேற்பாடுகளை சிந்தித்திருக்கவில்லை. அவர்கள் சூதின் வெற்றியைவிட போரைத்தடுப்பதே நோக்கமென ஆரம்பித்தவர்கள். தமக்கு எதிராடுபவரின் தோல்விக்காக வருந்தும் மனநிலை அவர்கள் தீவிரமாக சூதில் ஈடுபடுவதை தடுத்திருக்கலாம்.


தருமன் இப்போது சூது விளையாடுவதில் தன் குறைகளை களைந்து வருகிறான் என்றே தோன்றுகிறது. இப்போது அவர்கள் இருக்கும் தலைமறைவு வாழ்க்கையும் ஒரு சூதாட்டமே. இதுவும் கௌரவர்களுக்கு எதிரான ஆட்டம்தான். இதில் வெற்றி பெற வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய இலக்காக கொண்டிருக்கிறான். அதற்காக தன் மற்றும் தன் சகோதரர்கள், மனைவி அனைவருக்கும் ஓராண்டு அடிமைவாழ்வு என்பதை பணயம் வைத்து அவன் ஆடுகிறான். அவனுக்கு எதிராக ஆட்டத்தில் இப்போது ஒரு காய் நகர்த்தல் என திரௌபதியை கீசகன் அவமதிக்கும் நிகழ்வு நடக்கிறது. அவன் சற்று கோபப்பட்டு உளமிழந்து தன் சீற்றத்தைக் காட்டியிருந்தால் பாண்டவர்களின் தலைமறைவு வாழ்தல் முறியடிக்கப்பட்டு பாண்டவர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள். தருமன் இதற்கு எதிராக அருமையான காய் நகர்த்தலை செய்கிறான். திரௌபதிக்கு பீமனின் உதவி கிடைப்பதற்கான கால அவகாசத்தை தரவேண்டும். அதுவரை அவளை கீசகனிலிருந்து காக்க வேண்டும். தன்னையோ திரௌபதியையோ யாரென்று வெளிப்படுத்திகொள்ளாமல் இதை செய்தாக வேண்டும். அதற்காக உத்தரையை திரௌபதிக்கு அரணாக ஆகும்படி செய்து ஆட்டத்தின் இந்தத் வெல்கிறான் தருமன். தருமன் சூதாட்டத்தில் நிபுணத்துவத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறான் என்றே நினைகிறேன். இன்னும் மேலும் இந்த தலைமறைவு வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கான ஆட்டத்திலும் பின்னர் தன் அரசை மீண்டும் பெறுவதற்கான ஆட்டத்திலும் அவன் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன.

தண்டபாணி துரைவேல்


வெண்முரசு அல்லாத திருதராஷ்டிரன் 


நூல் இரண்டுமழைப்பாடல் 37 ல் இருக்கிறேன். நான் அறிந்த ஒரே மஹாபாரதம் வெண்முரசு மட்டுமே இதற்கு முன் மஹாபாரதம் என்பது கௌரவர்கள் பாண்டவர்கள் இடையே குருஷேத்ரம் என்னும் இடத்தில் நடந்த போர் என்பதை தாண்டி எந்த சித்திரமும் எனக்கு இல்லை. வெண்முரசு வாசிப்புக்காக மஹாபாரதம் பற்றிய மற்ற படைப்புகளை வாசித்து வந்த போது "கதா காலம் - தேவகாந்தன்" படிக்க நேர்ந்தது.  இதில் வரும் திருதராஷ்டிரனை எவ்வளவு யோசித்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, முதல் இரவில் தட்டு தடுமாறி போய் அமர்ந்து, காந்தாரி இருப்பதை அவளை பேசவைத்து அறிகிறான். ஏன் என்று தெரியவில்லை இதை வாசித்ததும் சரியான கோபம் வருகிறது. எனக்கு வெண்முரசு அளித்த திருதராஷ்டிரன் சுத்த வீரம் சற்று முரடண் (வாசித்த வரை) பீஷ்மரையே..... துவந்தயுத்தம் செய்ய அழைத்து சண்டையிட்டவன். வேழம் போல உடல் கொண்டவன் காந்தாரியை மணக்க தடை வந்தபொழுது அனைவரையும் துவம்சம் செய்து தன்னந்தனியாக காந்தாரியோடு மீண்ட கீரோ. கண்களை மூடிக் கொண்டு செவி, நாசி வழியாக எதையாவது உணர முடிகிறதா என்று முயன்று பார்கிறேன், அவ்வளவு ஆழமாக திருதராஷ்டிரனை என்னுள் பதியவைத்துவிட்டது வெண்முரசு. இனி வேறு சித்திரம் கொண்ட திருதராஷ்டிரனை ஏற்க இயலாது

ஏழுமலை

Monday, August 14, 2017

புஷ்கரனின் எழுச்சிஅன்புள்ள ஜெமோ

புஷ்கரனின் எழுச்சியையும் அதன்பின்னால் உள்ள உளவியலையும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். புஷ்கரன் அவ்வளவு கள்ளமற்றவனாக இருந்தமையால்தான் அவன் அப்படி ஒரு குரூரமானவனாக எழுச்சி அடைந்தான் என நினைக்கிறேன். நெப்போலியன் அப்படித்தான் இருந்திருப்பான். மிக எளிமையானவன். குள்ளமானவன். இட்லர் சின்னவயதில் திக்குவாய் இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் நல்லவனாக இருந்திப்பான் என்பார்கள். அவன் எப்படி சாதாரணர்களின் மனதிலுள்ள எல்லா தீமைகளையும் புரிந்துகொள்கிறான்? ஏனென்றால் அவன் சாமானியர்களின் மனதிலுள்ள தீமைகளின் மூர்த்தரூபமாக இருக்கிறான். அவனால் எல்லாவற்றையும் நுட்பமாகப்புரிந்துகொள்ள முடியும்

சத்யா

நீர்க்கோலம் – மூவனல்இம்முறை ஊட்டி காவிய முகாமில் கவிஞர் இசையின் ‘ஆட்டுதி அமுதே’ என்னும் கவிதை வாசிக்கப்பெற்றது. அப்போது அதை கவிதையாக்குவது எது என்ற கேள்விக்கு “அதை அப்படி ஆட்டு என் செல்லமே” – என்ற கடைசி வரியே எனப் பதிலிறுத்தார் ஜெ. அந்த வரி மட்டுமில்லைஎன்றால் அது ஒரு நிகழ்வு மட்டுமே!! வெண்முரசில் இத்தகைய அனுபவம் பல முறை வந்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய விவரணை வந்து கொண்டேயிருக்கும். சட்டென்று ஒரு வரி, அந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் வேறோர் தளத்துக்கு எடுத்துச் சென்று விடும்.

நீர்க்கோலம் 77 ல் அப்படி ஒரு நிகழ்வு வந்துள்ளது. தன்னைச் சூழ்ந்து எரியும் காட்டுத்தீயை கனவில் உணர்ந்து எழும் நளனைச் சூழ்ந்து நெருக்குகிறது. அதைச் சொல்லி வரும் வெண்முரசு அந்த தீயை ‘செந்நிறமும் பொன்னிறமும் நீலநிறமும் கொண்ட மூவனல்.’ என்கிறது. இந்தச் சொற்றொடர் இந்த நிகழ்வை முற்றிலும் வேறு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. மூவனல் என்பவை மாதரிஸ்வான், ஆபாம் நபாத் மற்றும் வாக். சொல்வளர்காட்டில் தருமர் இம்மூவனலைப் பற்றி பேசுகிறார். ஆரணிக்கட்டையில் எழுகிறான் மாதரிஸ்வான் – செந்நிறமானவன். பெய்யும் நெய்யிலும், சோமத்திலும் எழுகிறான் நீருள் உறையும் ஆபாம் நபாத் – பொன்னிறமானவன். வேதமோதும் நாவில் எழுகிறான் வாக் நீல நிறமானவன். இம்மூவரும் இணைந்து செய்வதே வேள்வி. இங்கே மூவனலும் இணைந்து உருவாக்கும் வேள்வியில் தன்னையே ஆகுதியாக்குகிறான் நளன். தருமன் கந்தமாதன மலையில் செய்தது போல.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்

பேசுபொருள்


அன்புள்ள ஜெ வணக்கம்

ராகவராமன் வில்லால் அரசியலை அறிந்தான். அவன் எதிர்நின்ற ராவணப்பிரபுவோ வீணையால் அதை அறிந்தான்.”

இந்த உரையாடலில் ஒரு வித மயக்கம் தோன்றுகின்றது. சரிநிகர் ஏற்படவில்லையோ என்று தோன்றுகிறது. மீண்டும் பாருங்கள்

அரசியலை என்பதை விடுத்து பிரமத்தை அல்லது மெய்மையை அல்லது பிரபஞ்சத்தை அல்லது உலகை என்று இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்

இங்கு அரசியல் பேசுபொருள் என்பதால் நீங்கள் அரசியலை என்று சுட்டுகின்றீர்கள் போலும். அரசியல் ஒரு பகுதியாக நின்று மயக்குகின்றது

அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்


அன்புள்ள மாணிக்கவேல்

அரசியலை என்பதே சரியானது. பிரம்மத்தையும் மெய்மையையும் அவர்கள் அதனூடாக அறிந்தார்கள் எனச் சொல்லமுடியுமா என்ன

ஜெ

அணியாடை


அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

மாநாகங்களின் தழுவலென இணைந்து  பிண்ணிச் செல்கிறது நளதமயந்தி கதையும் விராட பருவமும். இன்னும் பின்னகர்ந்து நோக்கினால் வெண்முரசின் ஒட்டுமொத்தச் சித்திரத்துள்ளும் மிக நேர்த்தியாக இழையோடுகிறது இதன் அத்தனை சரடுகளும்

// விழைந்த ஒன்று எதிர்வரும்போது அதன்மேல் ஐயம் கொள்ள மானுடரால் இயல்வதில்லை.// இதுவே நளனுக்கும் தமயந்திக்கும் நிகழ்கிறது. தூது சென்ற அன்னத்திடம் இருவரும் பெற்றுக் கொள்வது அவரவருக்கான கனவுகளை. ஒவ்வொருவரும் அவரவர் கனவுகளில் ஒழுகி, அனைத்தும் ஒன்றிணையும் மாபெரும் பெருங்கனவை - கரவுக்காட்டை வாழ்க்கை என்கிறோம்

வழக்கமாக நளன் கதைகளில் அவனைத் தீண்டிய கார்க்கோடகன் அவனது உருவை மீளப்பெற உதவும் ஒரு ஆடையைத் தந்து செல்லும். அந்த ஒற்றை வரியை உளவியல் கூறுகளோடும் இலக்கிய நேர்த்தியோடும் விரித்திருக்கிறது வெண்முரசு.

ஒருவனது உருமாற்றம் என்பது அகவயமாக நிகழ்வதிலேயே முழுமையடைகிறது எனும்போது  மீட்சிதரக் கூடிய அந்த ஆடையும் எடை கொள்கிறது

அன்னப்பறவை மாலை கொண்ட அணிக்கரைப் பின்னல். அன்னம் அவர்கள் கண்ட கனவு. அந்த ஆடை - கலியின் அருளால் பிறந்த நளனது விழைவு; சின்னஞ்சிறு நிஷதபுரியிலிருந்து அவன் காணும் பெருங்கனவு. அவனது 
முடிசூட்டன்று அவனுக்கு விலைமதிப்பற்றதாகத் தெரிந்த ஒன்று அந்த ஆடை. பேருருக் கொண்டெழும் தமயந்தி அருகில் சிறிதாக உணரும் அவன் தன் உள்ளாழத்தில் புதைத்து வைத்து மறக்க முயலும் தன்னகங்காரம் அது. சத்ராஜித்தென முடிசூடும் அவளது முழுமுதல் வெற்றியின் தினத்தில் அவனது உள்மனம் தான் இழந்துவிட்ட தன்மதிப்பைக் கனவில் காண்கிறது.   தன்மதிப்பை இழந்துவிட்டவர்கள் அதை உலகுக்கு அறிவிக்கத் தவறுவதே இல்லை - மறைக்க முயன்றாலும். குங்கன் ஒப்புக்கொள்வது போல தோல்வியை உள்ளாழம் விரும்பி ஏற்கும் சூதுக்களம் அது.

எனில் அரசனென்றும் கணவனென்றும் ஆணென்றும் அணிந்திருக்கும் ஒவ்வொன்றையும் அவன் அகத்தினின்று உரித்து, கான் நெருப்பில் எரித்த பின்னர் கார்க்கோடகன் அந்த ஆடையை, அவன் கருவூலத்திலிட்டுக் காத்த அகங்காரத்தை நினைவுறுத்துகிறான். அவனது ஆழ்மனப் பொதியில் கனவென அதைச்சுமந்து  நளன் பாகுகன் ஆகிறான். பாகுகன் நள உருப்பெற அவன் தனது சுயமதிப்பை சூடுவதே மீட்சியாக இருக்க முடியும்

எனில் பேருருக்கொண்டு நின்றிருந்த பெருங்காடு ஒன்றுமில்லையென எரிந்து தணிந்ததை வாழ்வெனக் கண்டவன் அவன். பேரிழப்புக்குப் பின்னர் மீண்டெழுவதில் மானுடருக்கு உள்ள பெருந்தடை அவர்கள் இழந்தவை அல்ல - எழுந்து பெறும்பயனென்ன எனும் வினாவே.  
//அன்றன்று இருத்தல் என்பதற்கப்பால் வாழ்வதற்கென ஏதேனும் பொருள் இருக்க இயலுமா என்றான். இறப்பை அணுகுதல் என்றல்லாமல் இளமை முதிர்வதற்கு என்ன இலக்கு என்றான்.//

அதையே காளாமுகரிடம் (கருமையெதிர்வோர்- அருமையான சொல்கேட்கிறான்.  விடை ஒன்றை அறிந்ததும் ஆழப் புதைந்த விதையும் முளைத்தெழும்.

மிக அழகாக அந்த ஆடையைக் கதையில் நெய்திருக்கிறீர்கள்

மிக்க அன்புடன்,
சுபா