Wednesday, August 30, 2017

நீர்க்கோலம் – துரியனும் புஷ்கரனும்




துரியனின் ஆட்சியை புஷ்கரனின் ஆட்சியோடு ஒப்பிடலாம் என  இக்கடிதம் சொல்கிறது. அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவே. ஒருவரின் நீர்க்கோலமாக பிறிதொருவரைக் காட்டுவதே நீர்க்கோலத்தின் வடிவம் என்றாலும் அந்த மூல வடிவை ஊகிக்க சில மூகாந்திரங்கள் நாவலினுள் இருக்கிறதா எனக் காணலாம். சிலருக்கு சில தருணங்களின் எதிரொளிப்பாக சில நிகழ்வுகள் வந்துள்ளன. உதாரணத்திற்கு சுதேஷ்ணியிடம் உத்தரை பற்றி சைரந்திரி பேசுவது, பிரீதைக்கும் சைரந்திரிக்குமான ஒரு அதிகார அரசியல் போன்றவற்றைக் கூறலாம். முன்னதை திரௌபதிக்கும் பானுமதிக்குமான உரையாடலாகவும், பின்னதை திரௌபதிக்கும் குந்திக்குமான அதிகார அரசியலாகவும் காணலாம். ஏனெனில் இவை வெறும் தருணங்கள். மேலும் இத்தருணங்களுக்கு இணையான தருணங்கள் வெண்முரசின் பிற நாவல்களிலும் வந்துள்ளன. இவை நிகழ்ந்து முடிந்தவை. எனவே நாம் பொருள் கொள்ள வழி இருக்கிறது.



ஆனால் துரியன் விவரம் சற்று வேறு. எவ்விதத்திலும் புஷ்கரனிடம் துரியனின் எந்த சாயலும் இல்லை. உண்மையில் அவன் உத்தரனின் ஒரு பிரதிபலிப்பு. சுதீரன் சற்று முன்னால் நிகழ்ந்திருந்தால் புஷ்கரனும் உத்தரன் ஆகி இருக்கக் கூடும். ஆனால் பாவம் அவனுக்கு வாய்த்ததோ சீர்ஷர். உத்தரனின் மீட்புக்கு அவனைப் படை முன் கொண்டு நிறுத்திய பிஹன்னளை ஓர் காரணம். மேலும் புஷ்கரனிடம் கலி இயல்பாக வந்தணையவில்லை. சீர்ஷர் கொண்டு வந்து சேர்த்தார். புஷ்கரனின் தெய்வ வடிவு அந்த எருதே. அது மூர்க்கத்தின் குறியீடு. முன்பு வெண்முரசில் வந்த வரி தான், கொலை செய்வதன் இன்பத்தை அறிபவை மூன்றே, எருது, யானை மற்றும் குதிரை. ஏனென்றால் இம்மூன்றும் உண்பதற்காகக் கொல்வதில்லை. அந்த மூன்றில் இவனது தெய்வம் எருது. முதிரா இளமையில் அப்பாவித் தனமாக இருந்ததன் மறு எல்லையே அவனது இந்த மூர்க்கத்தனமான குரூரம். அதன் எல்லையை அடைந்து கடந்த காரணத்தாலேயே அவன் மீட்படைகிறான், வான்மீகி போல, விஸ்வாமித்திரர் போல.



மாறாக துரியன் வேழம் போன்றவன். அவன் தன் இளமையில் ஸ்தூனகர்ணனை அடைந்து தன்னுள் இருந்த துரியோதனையை அழித்த பிறகும் கூட அவனில் இந்த குரூரம் கூடவில்லை. அவன் சொல்லவிந்தான், ஆயினும் மூர்க்கமானவன் ஆகவில்லை. இப்போது பெண்ணிழிவு செய்த ஒருவனாக அவனை அஸ்தினபுரி எவ்வாறு எதிர்கொண்டிருக்கும்? இதற்கு நேரடியான பதிலை நீர்க்கோலம் தரவில்லை. ஆயினும் கர்ணனை அது நடத்திய விதத்தில் இருந்து ஒருவாறாக ஊகிக்கலாம். ஆம், துரியன் கர்ணனின் தூண்டலாலேயே அதைச் செய்தான் என மொத்த பழியையும் கர்ணன் மேல் சாற்றி இருக்கக்கூடும்.



அப்படியென்றால் அவனில் கூடிய கலி என்ன தான் செய்திருக்கும்? கலிக்கு ஒரு சிறப்பு உண்டு. அது எதைக் கொடுக்கிறதோ அதற்கு ஈடான ஒன்றை இப்பிறப்பிலேயே மீண்டும் எடுத்துக் கொள்ளும். துரியனைப் பொறுத்த வரை அவனது ஆட்ச்சிக்காலம் கலியின் கொடைக் காலமாக இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். அந்த கொடைக்கான மறு துலாத் தட்டின் நிகராகத் தான் குருஷேத்ரம் வரப்போகிறதே!! எனவே துரியனின் ஆட்சி அப்படி ஒன்றும் மோசமாக, ஒரு ஸ்டாலின் கால கம்யுனிச ஆட்சியாக இருந்திருக்காது.


அன்புடன், அருணாச்சலம் மகராஜன்