Thursday, August 3, 2017

கார்க்கோடகனும் நளனும்:





நளன் தமயந்தியை கார்க்கோடகன் தழுவி இருப்பதைக் கண்டு விலகிச் சென்றான் என கரவுக்காட்டில் வந்த விறலி பாடுகிறாள். உண்மையில் கார்க்கோடகன் தழுவியது யாரை? தமயந்தியை அல்ல. அவன் தழுவியது, விஷமென உள்ளேறியது நளனிடம் தான். அது அவன் தமயந்தியை கைப்பிடிக்கும் சமயத்தில் மகதனால் அவனுள் செலுத்தப்பட்டது. தமயந்தியால் அவனின் ஷத்ரியத்தன்மையைக் குறித்த பேச்சுகளால் வளர்க்கப்பட்டது. அந்த முதலிரவில் தமயந்தியிடம் தன் காட்டாளப் பிறப்பைக் கூறி சினமடைகிறான் நளன். இத்தருணத்தில் தான் அவன் தமயந்தியிடம் இருந்து நளனிடம் வருகிறான்! அவளிடம் ‘உடல்பெற்றேன், அறிந்திருப்பாய்.’ என்கிறான். நளனிடம் இருப்பது, “என் விசை. என் நஞ்சு. பிறிதழியும் என் முழுத்தழுவல்.” என உரைக்கிறான். அவள் ‘தேவயானியின் மணிமுடியை’ வேண்டியது நளனிடம் தான்!! எனவே தான் அவனது விலகல் அவளை பெரிதும் வருத்தவில்லை.

அவன் தன்னை உணர்ந்து அவளிடம் இருந்து விலகிய சமயத்தில் அவனில் எரிந்து கொண்டிருந்தது ஒன்றே!!! தன்னை விதர்ப்பத்தில் அவமானப்படுத்திய அத்துணை ஷத்ரியர்களையும் கொன்றொழிப்பது. அந்த விழைவையே கார்க்கோடகன் எடுத்துக் கொள்கிறான். எனவே தான் ஒரு கணத்தில் அவன் தமயந்தியிடம் இருந்து விலகுகிறான். அந்த விலகலை தமயந்தி ஏற்றுக் கொள்ளவே அவளை சக்கரவர்த்தினியாக்கி சத்ராஜித் வரை கொண்டுசெல்கிறான். நளனின் இந்த வெறியை அவன் படை கொண்டு சென்று ஷத்ரிய நாடுகளை வெல்லக் காட்டிய முனைப்பில் இருந்து அறியலாம். மகதனையும், கலிங்கனையும், வங்கனையும் அவர் நடத்திய விதத்தில் ஒளிந்துள்ளது அவரது கார்க்கோடகம். மகதனைத் தன்னுடன் வாள்ப்போருக்கு அழைக்கிறான் நளன். அவன் தன் குல மேன்மைக்காக உயிர் துறக்கிறேன் என்ற போது குதிரைகளால் கட்டி அவன் உடலைக் கிழித்தெரிகிறான் நளன். பிற இருவரையும் வாளைச் சுழற்றி கொன்று வீசுகிறான். தமயந்தியின் வெற்றி தன்னால் அமைய வேண்டியது என்பதே நளனின் குறி. எனவே தான் அவன் சூதுக்கும் ஒப்புகிறான். நளனை சூது வரை கொண்டு சேர்த்தது கார்க்கோடகன் தான்!!

பன்னிரு படைக்களத்தில் தருமன் சூதுக்கு அமர்ந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கும் சமயம்!! சூழ்ந்திருந்த தேவர்களும், இதர முனிவர்களும் இவன் நாம் சொல்லும் நன்மையைக் காது கொடுத்துக் கேட்கவில்லையே என வருந்துகிறார்கள். அப்போது ஒரே ஒருத்தன் மட்டும் “ஆனால் அவன் உணர்ந்துகொண்டிருக்கிறான் என்னை! அவன் காதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மெல்ல மெல்ல என்று.” – அவன் கார்க்கோடகன்!!! அவன் எங்கிருந்து தருமனுக்குள் வந்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை!!! முதலிரவுக்குப் பின் தருமனில் கூடிய தெளிவு அதிலும் குறிப்பாக அவனது பாரத வர்ஷத்தைப் பற்றிய பார்வை, அதில் தனது இடமும், பங்களிப்பும் என்ன என்பதைப் பற்றிய தெளிவு கண்டு விதுரர் மட்டுமன்றி நாமுமே வியப்படைந்தோம்!! நாகம் கவ்வி விட்டிருந்திருக்கிறது!! மீண்டும் மீண்டும் வெண்முரசின் ஒருமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்