Sunday, September 24, 2017

உறவுக் கோர்வை.  (நீர்க்கோலம்- 89)

உறவுக் கோர்வை.  (நீர்க்கோலம்- 89)
     உத்தரையை  அர்ச்சுனனுக்கு மணமுடித்துவைக்க அவனைத் தவிர அனைவரும் விரும்புகின்றனர். உத்தரைக்கு அதில் பெரும் விருப்பம் இருப்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. உத்தரையின் விருப்பத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  ஒரு பெண் தன் துணையிடம் விரும்பும் அத்தனை குண நலன்களையும் அமையப்பெற்றவன் அர்ச்சுனன். அவளை சீர்படுத்தி,  ஆளுமையை வளர்த்து கலைகளில் அவளை வல்லவளாகச் செய்திருக்கிறான் அவன்.  மேலும் அவன் பெண்ணுருவில் இருப்பதால்  அவனிடம் அவள் நெருங்கி பழகியிருக்கிறாள். அவள் பெண்மை அவனுள் உறையும் ஆண்மையை கண்டுவிட்டிருக்கும். ஆதலால் அவள் அவன் மேல் விருப்பப்படுவது மிக இயல்பானது.  ஆனால் அர்ச்சுனன் ஏன் அதற்கு சம்மதிக்கவில்லை?  அர்ச்சுனன் பல பெண்களை மணம்கொள்ள தயங்காதவன். ஆனால் இந்தத் திருமணத்திற்கு  ஏன் அவன் மறுக்கிறான் என்பதை நாம் சிந்திக்கவேண்டியதாக இருக்கிறது. 
      மனிதர்கள் இரு பொருள்களை ஒன்றாக கோர்க்கையில் கவனத்துடன் இருக்கிறார்கள். எந்த வண்ண கீழாடைக்கு எந்த வண்ண மேலாடை,  எந்த விழாவுக்கு எந்த  அணிகலன், எந்த உணவு உண்கையில் எந்த கறியைச் சேர்த்துக்கொள்வது, எந்த திரைப்படத்திற்கு யாருடன் போவது, எந்தக் கூட்டத்தில் எதைப் பேசுவது, என எல்லாவற்றிலும் நாம் கவனத்துடன் இருக்கிறோம். அப்படி நாம் தவறுதலாக பொருத்தமில்லாத இரண்டை ஒன்றாக கோர்த்துவிட்டால் அது ஒருவேளை அலங்கோலமாகிவிடலாம். அவற்றின் பயன் தவறி பாழாகிவிடலாம். நமக்கோ மற்றவருக்கோ இடையூறாகிவிடலாம். அல்லது சமூகத்தின் பார்வையில் நம்மை இளிவரலுக்கு உள்ளாக்கிவிடலாம். இப்படி பொருத்தம் பார்த்து இணைப்பதென்பது எல்லா விஷயங்களிலும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
   ஒரு இல்லறம் அமைப்பதற்காக  ஒரு ஆணையும் பெண்ணையும் தம்பதியர் என  இணைப்பதில் நம் மரபு மிகவும் கவனத்துடன் இருக்கிறது. குணத்தின் காரணமாக பொருத்தம் பார்ப்பதைவிட பொருளாதாரம், மதம், இனம் போன்றவற்றில் பொருத்தம் பார்ப்பதில் அதிக முக்கியத்துவம் காட்டப்படுகிறது. அதைவிட முக்கியமாக,  உறவுமுறை பொருத்தம் இல்லையென்றால அது கண்டிப்பாக தவிர்க்கப்படுகிறது.           மனிதர்களை உறவாக கோர்ப்பதிலும் சமூகம் பல விதங்களில் பொருத்தம் பார்க்கிறது.  பாலுறவுகொள்வதை தவிர்க்கும் உறவுமுறைகளை நெறிகளென இச்சமூகம் கொண்டிருக்கிறது.  பல நெறி மீறல்களை சகித்துக்கொள்ளும் சமூகம் இந்த விஷயத்தை சற்றும் சகித்துக்கொள்வதில்லை. இதில் நெறிமீறலை சமூகம் மிகக் கடுமையாக எதிர்க்கிறது.  பாலுறவில் கட்டுக்களை மிகவும் தளர்த்தியுள்ள மேலைச் சமூகத்தில்கூட உறவுக்  கோர்வையில் இந்த நெறி மிகக் கடுமையாக பேணப்படுகிறது.  சமூகத்திற்கு சமூகம் சில வேறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும் அடிப்படையாக சில உறவுகளுக்கிடையே பாலுறவு தவிர்க்கப்படுதல் அனைத்து சமூகங்களிலும் பொதுவாக  இருக்கிறது.  விலங்கிலிருந்து மனிதன் வேறுபட்டிருப்பதகான் ஒரு முக்கிய குறியீடாக இது இருக்கிறது. பெற்றோர் பிள்ளகளுக்கிடையில், உடன் பிறந்தார்க்கிடையில்  முற்றிலும்  நீக்கப்பட்டதாக இவ்வுறவு இருக்கிறது.    
      இவ்வுறவுகளின் நீட்சியாக அமையும் மற்ற உறவுகளும் இதில்  இயல்பாக சேர்ந்துகொள்கின்றன. தந்தையின் சகோதரர்கள், தந்தை உறவின் நீட்சியாகவும்  தாயின் சகோதரிகள்  தாய் உறவின் நீட்சியாகவும் ஆகின்றனர்.  ஆகவே அவர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு சகோதரர் உறவின் நீட்சியாக கொள்ளப்படுகிறது.  ஆகவே இவர்களுக்கிடையே பாலுறவு தவிர்க்கப்படுகிறது.  ஒரு தந்தை மகளுக்கிடையேயான நேசம் மிக உயரியது.   அந்த நேசத்தில் அணுவளவும்  காமம் கலப்பதில்லை. அது மனித குலத்தின் அடிப்படைப் பண்பாடு.  உறவுகளுக்கு வெளியில்  பெற்றோர் உறவின் நீட்சியாக அமைவது ஆசிரியர் மாணவரிடம் கொள்ளும் உறவாகும்.   ஒரு ஆசிரியர் தன் மாணவனை தன் பிள்ளைக்கு நிகராக கொள்ளவேண்டியவராவார்.      ஒரு உண்மையான ஆசிரியர்  ஒரு தந்தையைப்போன்றவர்.  தன் மகனென மகளென தன் மாணவர்களை கருதாத ஒருவரால் சிறந்த ஆசிரியராக ஆக முடியாது.
   உத்தரை அர்ச்சுனனை முதலில் ஒரு தோழியாகவும் ஆடல் கலையை கற்பிக்கும் ஆசிரியையாகவும் பின்னர் அவனை ஆணென அறிகையில் துணைவனாகவும் கருதிவருகிறாள். ஆகவே  அவன் மேல் இயல்பாக காதல் கொள்கிறாள். ஆனால் அர்ச்சுனன் உத்தரைக்கு ஒரு முழுமையான ஆசிரியனாக இருந்து அவளுக்கு கலைகளை கற்பிக்கிறான்.  ஆகவே அவன் அவளைத் தன்  மகளெனக் கருதுபவனாக இருக்கிறான்.   முழுமையான ஆசிரியனாக விளங்கிய அர்ச்சுனன் அவளை தன் மகள் என்ற உறவின் நீட்சியாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.  ஆசிரியனாக இருந்த அவன்  காதலனாக ஆக முடியாது என்பதை அர்ச்சுனன் உணர்த்துகிறான்.  
       அர்ஜுனன் அவையை வணங்கியபின் விராடரிடம் “அரசே, தங்கள் மகளுக்கு நான் ஆசிரியனாகவே இருந்தேன். பிறிதொன்றுமாக அல்ல” என்றான்.
     
       

கரவுக்காட்டின் சித்திரங்கள் நமக்கு மாறான செய்தியை தந்ததாகச் சொல்லலாம். ஆனால் கரவுக்காட்டின் நிகழ்வுகள் மதி மயக்கத்தில் இருந்தவர்களால சொல்லப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அவர்கள் கரவுக்காட்டில் கண்டதும்,   கண்டதாக நினைத்த நிகழ்வுகள் அனைத்திலும் அவர்கள் உண்மையாகக்   கண்டவையும்  கற்பனை செய்தவையும்,  எதிர் பார்த்தவையும்,   எதிர்பார்க்காதவையும்,  ஆழ் மன இச்சைகள் வடிதெடுத்த கனவுகளையும் கலந்து உருவான புனைவு என்று கருதுகிறேன்.  ஆகவே அங்கு நிகழ்ந்ததாக கருதப்படும்  நிகழ்வுகள் தர்க்கத்தின் எல்லைக்குள் வராது என நான் புரிந்துகொள்கிறேன்.