Friday, November 17, 2017

அருள்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

பலராமர் பெருமூச்சுடன் “நான் எவரிடமும் இதுவரை பிழைபொறுக்கும்படி கோரியதில்லை” என்கிறார்.  அதற்கு யௌதேயன் “மைந்தர்பொருட்டே பெரும்பாலான தந்தையர் முதல்முறையாக கைகூப்பி மன்றாடுகிறார்கள், மாதுலரே” என்கிறான் - இந்த இடத்தில் யௌதேயனுக்கு பளார் என்று ஒரு அறை "செய்வதெல்லாம் செய்து விட்டு வியாக்கினமா பேசுகிறாய்?" என்று மனதில் சட்டென்று ஒரு எதிர்பார்ப்பு.  பலராமர் உடனே அதை நிறைவேற்றவில்லை ஆனால் யௌதேயனுக்கு கிடைக்கிறது.

மனம் ஆவலுடன் தாவி மேல் செல்ல அலை கீழே இருக்கிறது.  மனம் தாழ அலை எழுந்து பெரிதுயர்ந்து நிற்கிறது.  ஒன்றை ஒன்று விஞ்சும் ஓங்கில்கள் அடுத்தடுத்து வியப்பில் ஆழ்த்த கணிப்பிற்கு இடம் தராமல் கணத்தில் திசை மாற்றியவாறு செல்கிறது எழுதழலின் விளையாட்டு.  தேர்ந்த சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சு - இவ்வாறென்று கருதி முழுவிசையுடன் மட்டை ஓங்கி வர அங்கொன்றுமில்லை என்று திசை திருப்பிக்கொள்கிறது பந்து.

மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, உருகி பக்தி கொண்டு, கண்களில் நீர் மல்கி, ஆவேசப்பட்டு, சாகசம் எனத் தாவி, காதல் வசப்பட்டு (மாமலர் வாசித்துக் கொண்டு இருந்தபோது தேவயானியை மனப்பூர்வமாக காதலித்தேன்.  உனக்கு என்ன தகுதி என்று நண்பர்கள் யாரும் எண்ணிவிடக் கூடாது.  எப்படியும் நிறைவேறவே வாய்ப்பில்லாத ஒரு தரப்பு காதல் தானே? யாது பிழை?), தத்துவ வசப்பட்டு, தியானம் என்று உவகை பெருகி சொல்லின்றி அமைந்திருந்து, இழை என ஓடும் நகைச்சுவையில் அவ்வப்போது சிரித்து (சில சமயம் பற்கள் காட்டிக்கொண்டு இருக்க "என்ன சிரிச்சிட்டே இருக்க? எனக்கும் சொல்லேன்" என்பாள் அம்மா) ஏகப்பட்ட கடிதங்கள் எழுதி ஒரு சிலது அனுப்பி நிறைய கடிதங்கள் அனுப்பாமல் என்னிடமே வைத்திருக்கிறேன் (அரைக்கிறுக்கென சிலர் அறிவர், முழு கிறுக்கென பலர் அறியவேண்டாம் என எண்ணி.  புஷ்கரனின் சீஷர் மீதான கமெண்ட்டை "அறிவின்மையின் கூர்மையினாலேயே ஒரு தெளிவை அடைகிறார்" எனக்கென வரித்துக் கொண்டு).    

நவம்பர் 1-ஆம் தேதி முதல் வேலையை விட்டுவிட்டேன்.  இனி ஜனவரிக்கு பிறகு தான் வேறு வேலை செல்வேன்.  இரவு பணி, குறைந்த உறக்கம், வாசிப்பதை கிரகிக்க சிரமம், சோர்வு இவையில்லாமல் பதினைந்து நாட்களாக இரவு உறக்கம், வெண்முரசு, நீண்ட நடை என்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.  இனி இரண்டு-மூன்று மாதங்கள் இப்படித்தான்.  இளையோன் பாரியுடன் பாலமலை அரங்கநாதர் கோவிலுக்குச் சென்றேன், மலை மீது உள்ளது - மலைகளும் காடும் சூழ்ந்தது.  வழியில் ஒரு பாட்டியைக் கண்டவுடன் "மூதன்னை" என்றார் பாரி.  கண்ணனை தரிசித்து முடித்தவுடன் அன்னதானக் கூடம் சென்றோம்.  முன்னதாக பாரி "ஊன் உணவு ஒருங்கி விட்டதா?" எனக் கேட்க "ஆம் ஒருங்கி இருக்கும்.  ஆனால் ஊன் இல்லாத உணவு" என்றேன்.  உணவு உண்டு திருப்பினோம்.

இளையோன் யோகேஸ்வரன் ராமநாதனை உவக்கிறேன்.  வெண்முரசின் நாவல்கள் எல்லாவற்றையும் வாசித்து முடிக்க வேண்டும்.


அன்புடன்
விக்ரம்
கோவை