Wednesday, November 8, 2017

அடைதல்



அன்புள்ள ஜெ வணக்கம்.

அன்னை அபிராமசுந்திரியிடம் அபிராமிப்பட்டர் “பாலைவிட இனிய சொல்லுடைய இனியவளே!  பனியென குளிர்ந்த உனது மாமலர்ப்பாதத்தை வைக்க எனது முடைநாற்றம் வீசும் தலை நன்றோ என்று கேட்கிறார் தவிக்கிறார் கண்ணீர் மல்குகின்றார் நம்ப மறுக்கின்றார். காரணம் அன்னைப்பாதம் மேலே வணங்காமுடியின் வளர்சடையில் பூத்திருக்கும் பூ. கீழே வேதபீடத்தில் வழியும் தேன்.

பாலினும் சொல் இனியாய் பனி மாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே-அபிராமிப்பட்டர்.

உத்தரை ஆற்றுப்படுத்த அவளை  வணங்கி துவாரகைக்கு  இளையயாதவரைக்காணவரும் அபிமன்யூ தலையில் பெரிதாக எதும் ஏறிவிடவில்லை.  ஆனால் துவாரகையைவிட்டு கிளம்பு அபிமன்யூ தலையில் இன்று ஏறியிருப்பது கண்ணனின் திருவடி. இந்த கண்ணனின் திருவடிமலர் அவன் சென்னியில் சித்தத்தில் பூக்க அவன் எத்தனை தூரம் வந்து இருக்கிறான் என்பதை திரும்பிப்பார்க்கும்போதுதான் வெண்முரசு ஏன் இத்தனை அலைக்கழிப்புக்கு இடையில் அபிமன்யூவை கடத்திச்செல்கிறது என்பதை அறியமுடிகின்றது.

அன்புள்ள ஜெ அபிமன்யூ என்னும் எளிய மானிட உயிர் கண்ணனை கண்டுக்கொள்ளும் பெருவெளியை நீங்கள் அழகாக செதுக்கிய விதம் ஈடுஇணையற்றது. கதையைப்படிக்கும்போது  எத்தனை எத்தனை அலைகழிப்புக்கு இடையில் சிக்கி அலைக்கழிக்கப்படவேண்டி உள்ளது என்று நினைத்தேன். உங்கள் கற்பனையையும் எழுதும் திறமையையும் ஞானத்தையும் கொண்டு வாசகனை அல்லல் படுத்துகின்றீர்கள் என்று சினந்தேன். இப்படித்தான் ஒரு ஜீவன் அது அடைய நினைக்கும் லட்சியத்தை வாழ்க்கையை உணர்ந்துக்கொள்ளமுடியும் அடையமுடியும்.  

உத்தரையிடம் விடைப்பெற்றுவரும் அபிமன்யூ பாலையைக்கடக்கிறான். நீர்விளையாடுகின்றான். அரசியில் சதுரங்கத்தில் சிக்கி தவித்து அடிப்பட்டு தீயாகி கொதிக்கிறான். கடைசியில் கண்ணனின் கீதத்தில் கறைகிறான். முழுநிலவு கண்’டு உயிர்ப்படைகிறான்.  
கதையை ஒரு யோக ஒழுக்காக நிலம் நீர் தீ  காற்று ஆகாயம் என்று படி படி  உயர்ந்து எழுந்து நடைபோடுகின்றது. அர்த்த நேர்த்தியாக செல்லும் கதை ஒரு ஜீவன் முழுநிலவு தரிசனம் பெரும்காட்சியைக்காட்டி, அந்த ஜீவன் சகஸ்ராரம் மலர்ந்து குளிரும் தருணத்தை நினைவில் எழுப்புகின்றது. ஜெக்கு ஒரு ஜெ.

மானிடக்கூட்டம் நினைக்கிறது. இறை என்பது மனிதரால் படைக்கப்பட்ட கற்பிதம் என்று. மானிடராலேயே அது இங்கு நிலை நிற்கிறது என்று. அந்த கற்பிதத்தை நிலை நிறுத்த ஒவ்வொரு மானிடத்துளியும் எத்தனை எத்தனை வழிகளில் கொள்கை பரப்புகின்றது. அதனால் வெல்லமுடிவதில்லை. இறைவன் வென்றுக்காட்டுகின்றான். இறைவன் மண்ணிலோ விண்ணிலோ நிலைக்க வாழ வளர மானிடதொகுதித்தேவை இல்லை. மானிட தொகுதி நிலக்க வாழத்தான் இறை தேவைப்படுகின்றது என்பதை இறுதியாக அபிமன்யூ அறிந்துவிடுகின்றான்.

அபிமன்யூ கண்ணன்மீதுக்கொண்ட அன்பால் அவருக்கு இழுக்கு வந்துவிடும் என்று தவிக்கிறான் துடிக்கிறான்  எரிகிறான் வெதும்புகின்றான். இதனால் கண்ணனில் இருந்து விலகி இருக்கும் கண்ணனின் மைந்தர்களின் மூன்று குழுக்களை ஒன்றினைக்க முயல்கின்றான் அதனால் கண்ணன் அவை புகும் முன்பு சாம்பனை சந்திக்கின்றான். சுபானுவை சந்திக்கின்றான் கண்ணனை் அவை புகுந்தபின்பு பிரத்யும்னனை சந்திக்கிறான்.

கதைக்காகப்பார்க்கும்போதும் சாம்பன் சுபானு பிரத்யும்னன் மூவரும் பரு உடலில் மனிதர்களாக இருக்கிறார்கள். அந்த பரு உடலின் ஆடல்களாக கதை விவரிக்கப்பட்டு உள்ளது ஆனால் அவர்கள் சூக்கும உடலில்   அழுக்காறாக அவாவாக வெகுளியாக இருக்கிறார்கள் என்பதை கதை உணர்த்துகின்றது.

மானிடக்கூட்டம் இறைவனை காக்க நினைக்கிறது. இறைவனில் இருந்து மாறுபட்டு நிற்கும் அழுக்காறு இல்லாத மானிட உலகமாக, அவாஇல்லாத மானிட உலகமாக வெகுளி இல்லாத மானிட உலகாமாக இந்த உலகம் மாறி இறைவனுடன் இணைந்து புகழுலகமாக தோன்ற வலிமைக்காட்டுகின்றது.  அது நடக்கக்கூடியதா? இருளே இல்லாத ஒளி மட்டும் உண்டா? 

இறைவன் இருக்கும் இடத்தில் அழுக்காறுக்கு என்னவேலை, அவாவிற்கு என்ன தேவை, வெகுளிக்கு ஏது இருப்பு. அவைகள் இறைவனை விலக்கி ஒதுங்கி இருக்கும்வரைதான் அவைகளுக்கு இருப்பு என்பதை மானிடன் இறைவனின் இனிமையில் இணையும்போதுதான் உணரமுடியும். அபிமன்யூவும் கண்ணனின் குழந்தைகளின் அழுக்காற்றை அவாவை வெகுளியை தாண்டிதான் கண்ணனின் இசைவெள்ளத்தில் மூழ்கிதான் கண்ணனைக்காண்கின்றான். கண்ணனிடம் அழுக்காறு அவா வெகுளிக்கு இடமில்லை. 

அபிமன்யூ சாம்பனை தான் ஒருவனாகவே வில்கொண்டு எதிர்ப்பேன் என்று சொல்கிறான்.  சுபானுவை தானும் தன் தந்தையும் வில்கொண்டு எதிர்த்து கண்ணனுக்கு துணைநிற்பேன் என்கிறான். ஞானம்வரும் முன் மனிதன் இறைவனை காப்பதாக நினைக்கிறான். ஞானம் வந்தபின்புதான் தன்னையும் மற்றும் அனைத்தையம்  இறைவன்தான் காக்கிறான் என்று அறிகின்றான்  . இறைவன் பெயரால் மதங்கள் முரண்படுவதும், மதத்தின் பெயரால் மனிதன் முரண்படுவதும் எத்தனை சிறுபிள்ளைத்தனம் என்பது கண்ணன் முன் கண்ணன் பிள்ளைகள் செய்யும் செயல்களை வைத்துபார்க்கும்போது புரிகின்றது.

சாம்பனை சுபானுவை வில்கொண்டு எதிர்ப்பேன் என்ற அபிமன்யூ பிரத்யும்னன் இடம் எந்த எதிர்ப்பும் காட்டாமல் என்ன நடக்கும் என்று மட்டும் சொல்லிச்செல்வது ஞானத்தின் தெளிவு. ஞானம்வந்தபின்பு தத் பொருள்படுகின்றது. அசத்து பொருள்அற்றதாகிவிடுகின்றது.

ஒரு ஜீவன் எளிதாக உறவென்றும் தனது கருமம் என்றும் அழுக்காறோடும், அவாவோடும் வெகுளியோடும் ’புரண்டு புரண்டு உருண்டு உருண்டு போராடிப்பார்க்கிறது அதனால் எந்த ஒரு சிறுமாற்றத்தையும் உலகில் ஏற்படுத்த முடிவதில்லை. அது செய்யவேண்டியது எல்லாம் தன்னால் முடிந்ததை தன்னிடம் உள்ளதை இறைவனுக்கு படையல் வைத்தல் மட்டும்தான். அபிமன்யூ தனது முயற்சி தனது வலிமை தனது அறிவு தனது ஆற்றல் அனைத்தும் ஓய்ந்துப்போகும் தருணத்தில் தனது புகழ்மாலையை கண்ணனுக்காக வைக்கிறான்.

“அபிமன்யூ இரு கைகளையும் தூக்கி உடலே நாவென உயிர்கொள்ள “எந்தை எழுக! யாதவர் குலச்செம்மல் வாழ்க! புவியாளும் மாமன்னர் வாழ்க!” என்று வாழ்த்துரை கூவினான். “வெல்க கருடக்கொடி! ஓங்குக படையாழி! நிலைகொள்க இமையாப் பீலி!”

மானிடத்துளிகள் செய்யவேண்டியது அதுதான். அதற்குமேல் இறைவனுக்கு அது செய்யவேண்டியது எதுவும் இல்லை. செய்யமுடிவதும் எதுவும் இல்லை. காரணம் இறைவனை புகழ்கின்றர்வர் எளியவர்கள் இல்லை. உலகத்தை படைத்தும் காத்தும் அழித்தும் திரியும் திறம்படைத்தவர்கள். ஆனால் இறைவன் எளியவர்கள் என்றுயாரையம் பார்ப்பது இல்லை. அவனுக்கு விண்ணளந்தவனும் மண்ணில் ஒரு இருப்பாக இல்லாத முரளியும் ஒன்றுதான். அவன் எந்த நாவின் புன்மொழியையும் கண்டு நகைப்பது இல்லை. தேன்மலர் என்றே ஏற்றுக்கொள்கின்றான்.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் சொல்கிறார்.“இறைவனே உண்மை என்று அறிவது ஞானம், ஞானம் தோன்றியதற்கு இரண்டு அறிகுறிகள் உள்ளன. ஒன்று அனுராகம். மற்றது குண்டலினி விழித்து எழுவது.. குண்டலினி விழித்து எழுந்தால் அன்பு பக்தி பிரேமை ஏற்படுகின்றது“

உத்தரை அபிமன்யூவை கண்ணிடம் அனுப்பவது தன்னிருப்பு மறைந்து இறைஞானம் பெறுவதற்குதான். அது ஞானத்தால் கிட்டினாலும், பக்தியால் கிட்டினாலும் ஒன்றுதான். ராதைபோல் பிரேமைப்பக்தியில் இவன் நிறைவடையட்டும் என்றுதான் ராதையைப்பற்றி நினைவை அவனிடம்  சொல்லி அனுப்புகின்றாள்.

துவாரகை வரும் அபிமன்யூ கண்ணன்மீது பணியாளர்கள் அமைச்சர்கள் செவிலியர்கள் வைத்திருக்கும் அன்பை அறிகின்றான். அன்பின் ஆழத்தை உணர்கின்றான். கண்ணனால் ராதையாக பெயர்சூட்டப்படும் மயூரியின் பக்தியை அறிகின்றான். பக்தியின் சக்தியை உணர்கின்றான். கண்ணனின் மனைவியர்களாகிய அத்தையர்களின் பிரேமையை அறிகின்றான். பிரேமையின் வல்லமையை உணர்கின்றான். வாழ்வின் எதற்கும் அப்பால் அன்பு பக்தி பிரேமை மனிதனை கொண்டு செல்லும் இடத்தை அபிமன்யூ அறிந்து அதனை பெற்றுக்கொள்கின்றான்.  கண்ணனின் இசையால் அவன் குண்டலினி விழித்து எழுகின்றது. ஞானம் உதிக்கின்றது. அனுராகம் ஏற்படுகின்றது. அவன் காணும் முழுநிலவு காட்சி அதற்கு சான்றாக உள்ளது. கண்ணன் உபப்பிலாவியத்தில் அபிமன்யூ இடம் சொன்ன ஞானத்தின் விளக்கம் அவனுக்கு துவாரகையில் கிடைக்கிறது.
 .  
இப்புவியில் முற்றிணைய இயலாத எவையும் இல்லை என்றறிவதே ஞானம்இணைக்கும் வழியறிவதே ஊழ்கம்.இணைந்தமைவது யோகம்” என்றார் இளைய யாதவர்“

அபிமன்யு கண்ணனுடன் இணையும் யோகத்தை எளிதாக அடைகின்றான். அது கண்ணனின் கருணையால் அவனுக்கு எளிதாக கிடைக்கிறது. அவன் அருளால் இவனுக்கு அது கிடைக்கிறது. அதற்காக அபிமன்யூசெய்வது எல்லாம் தன்னை வெற்றுக்கலமாக்கி அவனுக்கு ஒப்புவித்தல் மட்டும்தான். அப்படி ஒப்புவித்ததால் அவனுக்கு அது ஒரு இரவுக்குள் நடந்துவிட்டது. அதை பிரத்யும்னன் பார்க்கின்றான் ஆனால் அறியவில்லை. அவன் புலன் அறிகின்றது. ஞானமின்மையால் புலன் உணரவில்லை.

“வந்த தருணம் முதல் அவன் அபிமன்யூவின் தோற்றத்தை விந்தையுடன் நோக்கிக்கொண்டிருந்தான்ஆசுர நிலத்திலும் உபப்பிலாவ்யத்திலும்அவன் கண்ட அபிமன்யூ முழுமையாகவே தன்னை உரித்து விலக்கி உள்ளிருந்து புதியவனாக எழுந்திருந்தான்கள்வெறிகொண்டவன்போலகண்கள் கலங்கியிருந்தனமுகம் பித்தர்களுக்கே உரிய கலையாப் புன்னகை கொண்டிருந்ததுசொற்கள் தெய்வமேறியவன் நாவிலிருந்து எனஒலித்தன.

ஆனால் கண்ணனின் மைந்தர்களாக பிறந்த அவர்களுக்கு கண்ணன் யார் என்று தெரியவில்லை. கண்ணனுக்கு அவர்கள் தன்னை ஒப்புவிக்கவில்லை. கண்ணனில் இருந்து பிரிந்து தூரம் தூரம் என்று சென்றுக்கொண்டு இருக்கிறார்கள்.  கண்ணனின் மைந்தர்களை வைத்து அபிமன்யூவின் இணைதலை அறியமுடிகின்றது. அபிமன்யூவை வைத்து கண்ணனின் மைந்தர்களின் ஞானமின்மையை யோகமின்மையை இணைவின்மையை அறியமுடிகின்றது.

உலகில் உள்ள அனைத்தும் முற்றிணையமுடியும் அதற்கு ஞானம் வேண்டும், அந்த ஞானம் இல்லாதபோது பிரிந்துதான்போகமுடியும், ஊழ்கம் கூடுவதில்லை. யோகம் வாய்ப்பது இல்லை.  கடவுளுக்கே குழந்தையாக பிறந்தாலும் ஞானம் யோகம் வாய்ப்பது. இல்லை.

அபிமன்யூவை விட்டுவிட்டு கண்ணனின் மகன் முரளியையும் மற்ற மூன்று குழுமக்களையையும் கொண்டு கதையைப்பார்க்கும்போதும் கதை அதன் அற்புத தரிசனத்தை சித்திரம் செய்கிறது. எல்லாபுலன்களும் இருந்தும் மூவர்குழுக்கள் புலன் அற்றவர்களாக இருக்க, கண்ணனின் இசை செல்லமுடியாத தூரத்தில் அவர்கள் மக்கிக்கிடக்க,  புலனே இல்லாத முரளி கண்ணனின் இசை உலகத்தில் மூழ்கி திளைத்து செழித்து வளர்கிறான்.  
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை-என்பது திருவள்ளுவர் பொய்யாமொழி.

.உத்தரையை விட்டுவரும் அபிமன்யூ கண்ணனிடம் எதைபெறுவான் என்று காத்துக்கிடந்தேன். பெற்றது பெரியது. பெற்றவிதம் பெரியது. அதை பெரிதாக காட்ட ஜெவின்  விரியும் கதைக் களமும் பெரியது. பெரியது வெண்முரசு.

அபின்யூவை கண்ணனிடம் அனுப்பும் உத்தரை அவனுக்கு ஏன் ராதையை ஞாபகப்படுத்தினால் என்பதை  எண்ணும்போது திருநாவுக்கரசரின் இந்த தேவராம்  இனிக்கிறது.

ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேனுனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே-திருநாவுக்கரசர் நாயனார்.

அன்புடன்
ராமராஜன் மாணிக்வேல்.