Sunday, November 5, 2017

முரளி



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அவன் உலகில் கொஞ்சமாகவும் தன் உள்ளே எங்கோ இருளில் அதிகமாகவும் இருப்பவன்.  அவன் இருப்பு உள் நின்று நோக்க இவ்வாறு இருக்கும் என்று ஒருவராலும் சொல்லமுடியாது.  அவன் தூய துயர் பரப்பு என இருக்கலாம் அல்லது வேதனைகளின் விட்டு விட்டு தோன்றும் ஓட்டம் என இருக்கலாம் அல்லது மங்கலாய் தோன்றும் பொருளற்ற கனவு என.  எங்கு எவ்வாறு என்று தெரியாத ஓரிடத்தில் இருக்கும் ஒருவன்.  வேறு ஒரு பேரிருளில் பாவ மூட்டைகளின் அடுக்குகளில் தேடித் துழாவி ஒரு பாவ மூட்டையை தூக்கி வந்து அவன் முதுகில் கட்டிவிட எண்ணுகிறது சிறுமை.  அதர்வ மந்திரங்கள் பாவ-கரும மூட்டைகளை தேடி வேறோர் இருளில் ஒலிக்க அவனது சொந்த இருள் பரப்புக்குள் கருணையின் குழல் இசையை ஒலிக்கச் செய்கிறான் கண்ணன்.  உடலின் தந்தை புறக்கணிக்கலாம் உயிரின் தந்தை ஒருபோதும் ஓர் உயிரையும் புறக்கணிப்பதில்லை.  தந்தையின் மடியில் அமர ஏக்கப்பட்டு திருமாலின் மடியில் அமரும் தகுதி பெற்ற துருவன் போல் இவனும்.  "கதிர் இங்கே வா ! உன் பெயர் முரளி ! உன் தந்தை கண்ணன் ஒருபோதும் உன்னை புறக்கணிக்கக் கூடியவன் அல்ல.  ஆழமற்ற நதிக்கரையின் அதர்வ மந்திரங்களின் ஓசை அல்ல துவாரகையின் இக்குழலிசைதான் உன் உயிர்க்கு என்றும் வழியினை வகுப்பது."

வெவ்வேறு சிறுகதை மாந்தர் பலரும் வெண்முரசின் உலகத்தில் நுழைந்து முழுநிறைவு கொள்வதும் குறைகள் கொண்டோர் அவை நீங்கப்பெறுவதும் இயல்பே.  யார் எங்கு எவ்வாராயினும், நல்லார் எனினும் அல்லார் எனினும் எல்லோரும் என்றேனும் ஓர் நாள் பெருங்கருணையின் பரப்புக்குள் வர வேண்டியவர்களே.  பிரம்மத்தின் குறையை பிரம்மம் தானே சரி செய்து கொள்ளும் ?


அன்புடன்
விக்ரம்
கோவை