Monday, December 4, 2017

உவமை




அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

எழுதழலில் சதானீகன்-நிர்மித்ரன் இடையேயான உரையாடல் நுட்பமானது.  “புற உலகை அகம் சந்திக்கும்போது முற்றறியாத ஒன்றை அங்கு எதிர்கொள்ளுமென்றால் உள்ளூர ஒரு திடுக்கிடல் நிகழவேண்டும். ஆழத்து இருளொன்று அதிர்வொளி கொள்ளவேண்டும். சொல்லின்மையின் தருணம் அது.”

“அச்சொல்லின்மை அளிக்கும் அச்சத்தை வெல்லும் பொருட்டு தவித்தலையும் சித்தம் மூழ்குபவன் கண்டடைந்த கொடியென ஓர் ஒப்புமையை பற்றிக்கொள்ளுமென்றால் மட்டுமே அது புதியது.    

புற உலகை அகம் சந்திக்கிறது, முற்றறியாத ஒன்றைஎதிர்கொள்கிறது, மனம் இக்கணம் வரை பற்றி நின்ற அத்தனையும் விலக இன்னதென்று கூற இயலாத ஒன்று, விளக்கம் அற்ற ஒரு உணர்வு, ஏதேனும் ஒன்றை பற்றாவிட்டால் இல்லாமல் போய்விடுவோம் எனும் அச்சம், அது சொல்லின்மையின் தருணம். சட்டென்று சொற்களை விழைய ஒப்புவமைகள் பற்றி தரை இறங்கும் மின்னல்.  வானில் இருந்து பூமிக்கு.  கணங்களில்.  சொல்லின்மை ஒப்புவமைகளாய்.  சொற்களால் சொற்கலைஞனுக்கு, ஓவியமாய் சொற்கள் அற்று ஓவியனுக்கு, சொல்லற்ற இசையாய் இசை கலைஞனுக்கு.

"நூல்களும் கலைகளும் வெறும் ஒப்புமைகளின் திரள்களே."

கலை தன்னை மண்ணில் நிகழ்த்திக் கொள்கிறது.  ஊடகமே கலைஞன்.  அருளின் கைக்கருவி அவன்.  ஆனால் விருப்பி வேண்டி கரம் கூப்பி விண் தொழுது நிகழ்த்துமாறு அவனால் தருவித்துக் கொள்ளவும் முடியும் என்றும் எண்ணுகிறேன்.  அகம்-உள்ளுணர்வு புற உலகின் மீதான தன் கருத்துக்களை கலை என்னும் வடிவில் பதிவு செய்து கொண்டே இருக்கிறது.  சிறுமைகள் பெருமைகள், சரி தவறுகள், இன்ப துன்பங்கள், இச்சைகள், அச்சங்கள் என்று மனிதர் வகுத்துக்கொண்ட எல்லாவற்றின் மீதும் தன் வெளிச்சத்தை பாய்ச்சிவாறே இருக்கிறது.  அது அதன் கருணை.  ஒரு கயிறு வீசினேன் பற்றி மேலே  வாருங்கள் என்பது அதன் செய்தியாக இருக்கலாம்.  

மற்றொன்று ப்ரத்யும்னன் கண்ணன் பற்றி கூறுபவை.  யோகிக்கு காடு தானே இடம் ? உலகு உன்னைத் தாங்குமா? போக வேண்டியது தானே? எறும்புகளின் விளையாட்டில் யானை நீ ஏன் வருகிறாய் ?.  கண்ணன் ஒரு குறியீடு.  பேரருளின் முன் உலகியலோர் என்றும் வைக்கும் கேள்விகள் இவை.  ஆசையாய் அவர் மகிழ்ந்திருக்க தடுத்தாட்கொள்கிறேன் என்ற பேரில் புகுந்து திருமணத்தைக் கெடுத்த சிவபெருமான் மீது சுந்தரமூர்த்தி நாயனார் கொள்ளும் கோபத்தை ஒத்தது.  அப்புறம் இரண்டு திருமணம் செய்து வைத்தார் என்பதெல்லாம் ஏற்க முடியாது.  சுவையையே பாழாக்கி விட்டு, தானொன்றே ஈடு இணையற்ற பெருஞ்சுவை என்று காட்டி அவரைத் திருப்பிவிட்டு பின் உலகோர்க்கு சமாதானம் சொல்ல சொல்லும் கதை அது.  உலகியல் பலன்களின் பட்டியல் தராமல் சிவபெருமான் இமாலயக் காடுகள் தாண்டி ஊருக்குள் வர முடியாது என்பதனால்.    

கண்ணன் விலகிப் போய்விட்டால் அவர்கள் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள் என்பதும் போரே நேராது என்பதும் ஒருவேளை சரியாகலாம், ஆனால் மேலான ஒன்றைப் பெரும் வாய்ப்பை அவர்களும் பிறரும் யுகங்களுக்கும் இழந்தவர் ஆகும் ஆபத்து உண்டு.                                   


அன்புடன்
விக்ரம்
கோவை