Sunday, January 7, 2018

பகுதிகளின் அழகின்மையும் முழுமையின் அழகும் (குருதிச்சாரல் - 12)


  

  ஒரு கண்கவரும் அழகிய பொம்மைஅதன் உட்கூடு உலோகப் பொருட்களால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். பஞ்சுப் பொதிகளால் மென்மைக்கூட்டப்பட்டிருக்கலாம்.   அந்தப் பொம்மையை பாகம் பாகமாக பிரித்து அதன் உள்ளிருப்பதை எல்லாம் வெளியில் எடுத்துப் பிரித்துப்போட்டுப்  பார்த்தால் அங்கிருப்பது வெறும் குப்பைதான். சிலசமயம்  பார்ப்பதற்கே சகிக்காமல் போய்விடும்முழுமையில் இருக்கும் அழகு அதை பிரித்துப்பார்க்கையில் இருப்பதில்லை. நாம் அப்பொம்மையின் அழகை இப்படிப் பிய்த்துப்போட்டு அளவிடுவதில்லை. அப்படிச் செய்தால் நாம் மிகத் தவறான முடிவுக்குத்தான் வருவோம்.   ஒரு விபத்து ஒன்றில்  அங்கங்கள் துண்டிக்கப்பட்டு சிதைந்து இருக்கும் ஒரு விலங்கைக்  காணும்போது அஞ்சி அருவருத்து விலகிப்போகிறோம். அதே விலங்கு    முழுமைகொண்டு ஒரு புள்ளி மானென இருக்கையில் அதன் உருவத்தை, துள்ளி ஓடுதலைக் கண்டு  மனம் களிக்கிறோம்ஆக முழுமையில் இருக்கும் அழகு அதன் பகுதிகளில்  இருப்பதில்லை.   உதிரிபாகங்களின் அழகின்மையை வைத்து நாம்   முழுதாயிருக்கும் ஒன்றின் அழகை கணக்கிடக்கூடாது.
  

  நம் மனமும்  பல கூறுகளால் ஆனதுஇயற்கையாகவே நம் பிறப்பிலிருந்தே சில சிந்தைகளை கொண்டிருக்கிறோம்நம் வளர்ப்புகல்வி கேள்விகளால் பெற்றுக்கொள்வதுஇன்பம் துக்கம் வெற்றி தோல்வி எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை ஏற்படுத்திய  அனுபவங்கள் மேலும் நமக்கு பல குணங்களை அளிக்கின்றன. அவை நல்லவையும் அல்லவையுமானவை. நமக்கு  எழும்  பல சிந்தனைகளை நாம் வெளியில் சொல்லவே கூசுவோம். சிலவற்றை  வெளியில்  சொன்னால் நமக்கு பாதகத்தை விளைவிக்கும். எழும் சில எண்ணங்களை  தவறு  என்று மேலும் வளர்த்துகொள்ளாமல்  நாமே கட்டுப்படுத்திக்கொள்வோம்.   ஆனால் இந்த சிந்தைகள் எல்லாம் சேர்ந்தே நம் மனமென உருவம் கொள்கிறது. இந்த எண்ணங்களை கட்டுக்குள் வைத்து  நிர்வகிக்கும் திறனே நம்  ஆளுமைக்கு உருக்கொடுக்கிறதுஆகவே ஒரு மனிதனின் குணம் என்பது அவன் ஒட்டுமொத்த நடவடிக்கையை வைத்தே நாம் கணக்கிட வேண்டும். அதை விடுத்து அவன் பெற்றிருக்கும் ஏதாவது அனுபவம் அல்லது அவன் சொன்ன ஏதாவது ஒரு  கூற்றுஎன்றோ செய்த ஒரு செயல்அவனால் அவனை மீறி விளைந்த ஒரு நிகழ்வுபோன்ற எதையாவது  வைத்து அவன் ஆளுமையை கணிப்பது பெரிய தவறாகத்தான் இருக்கும்ஒரு மனிதனுக்கு காம எண்ணம் எழாமல் இருந்திருக்காதுஉனக்கு அன்று காம எண்ணம் இருந்தது அதனால் தான் நீ இப்படிச் செய்கிறாய் என்பது  எப்படி சரியான கூற்றாக இருக்கும்நீ இதை வாழ்வில் அனுபவிக்க வில்லை அதனால் நீ வஞ்சம்கொண்டு இதை செய்கிறாய் என்று கூறுவதும் இதைப்போன்றதுதான். இதைப்போன்ற கூற்றுக்களை யார் மீது வேண்டுமானாலும் நாம் சொல்ல முடியும்.     அசலை  பீஷ்மரின் மனதை இதைப்போன்று பிரித்துப்போட்டு ஆராய்கிறாள்பீஷ்மரின் இந்நாளைய மன நிலைக்கு அவள் ஒவ்வொன்றாக பல காரணங்களைச் சொல்கிறாள்


1. அம்பையை வஞ்சித்து அவள் சினம் கொண்டு சென்றது. அந்தப் பழியின் காரணமாக இன்று அஸ்தினாபுரம் அழியப்போகிறது குடி மைந்தர்கள் அழிந்துபோக பீஷ்மர் செய்த பிழைதான் காரணம் என்கிறாள்


இங்கு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு அம்பை வந்து நின்றாள். அன்று உங்கள் உதடுகளிலிருந்து எழுந்த இதே போன்ற நச்சுப்புன்னகை ஒன்றுதான் அவளில் அனல் எழச்செய்தது. அஸ்தினபுரியின் நுழைவாயிலில் அணையாது அமைந்த அந்த எரியிறைதான் மூண்டெழுந்து இந்நகரை இன்று அழிக்கப்போகிறதுஎன்றாள்.


 “உங்கள் பிழைக்கு உங்கள் கொடிவழியினர் முழுமையாக பலிகொடுக்கப்பட வேண்டுமா?” என்று அசலை சீற்றத்துடன் கேட்டாள்


2. அவர் மேற்கொண்ட பிரம்மச்சரிய விரதம் அவரால் சுமக்க  முடியாத சுமை. அதன் காரணமாக பிறழ்ந்த அவர் உளவியல் இப்போரை தடுக்க முயற்சி எடுக்காததற்கு காரணம் என்பது மற்றொன்று


ஒரு மூதாதை தன்னால் சுமக்க முடியாத எடையொன்றை தோளில் ஏற்றிக்கொண்டதன் விலையை அஸ்தினபுரி இன்று அளித்துக்கொண்டிருக்கிறதுஎன்றாள் அசலை.’


3. அவருக்கு என்று சந்ததிகள் உருவாகாமல்போய் அவர் உடன்பிறந்தாருக்கு  பிள்ளைகளும் பெயர் மைந்தர்களும் பெருகி இருப்பதனால் வந்த பொறாமை மற்றும்  கசப்புணர்வு  ஒரு காரணம் என்று சொல்கிறாள்


பிதாமகரே, நிகழா மைந்தரை உடன்பிறந்தார் குருதியில் கண்டு அதன் இசைவையும் இசையாமையையும் மாறி மாறி உணர்ந்து அலைக்கழிந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். பாலையின் முளைக்காத விதைமண்ணின் துயரம்தான் நீங்கள். இன்று கௌரவமைந்தரின் பெருக்கைக்கண்டு நீங்கள் கொண்டிருப்பது அன்பின்மை அல்ல, விலகலும் கசப்பும்தான். உங்கள் குருதியில் இக்கொடிவழி முளைத்திருந்தால் இம்மைந்தரும் பெயர்மைந்தரும் சிறப்புற்று அமைந்திருப்பார்களென்று ஒருகணமேனும் நீங்கள் எண்ணியதுண்டா?”


4. அவர்களுக்கு தன் உடன்பிறந்தார் பிள்ளைகள் மற்றும் பெயர்மைந்தர்கள் மீதான வெறுப்பை மறைக்கவே உதவியென்றும் கடமையென்றும் காரணம் சொல்லி போரைத் தடுக்காமல்  இருக்கிறார் என்று கூறுகிறாள்


சொல்லுங்கள், உங்கள் மைந்தரும் பெயர்மைந்தரும் உங்களுக்கு அளிக்கும் ஒவ்வாமையைத்தானே அவர்கள் மீதான பற்றாகவும் கடமையாகவும் மாற்றிக்கொண்டிருந்தீர்கள்? அவர்கள் பொருட்டு வில்லேந்தவும் வேலேந்தவும் உங்களைத் தூண்டுவது நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்கள் என்பதுதானே?”


இவையெல்லாம் முற்றிலும் உண்மையல்ல என்பதைப்போல முற்றிலும் பொய்யான கூற்றுக்களும் அல்ல.  பெரும் விவேகியாக பீஷ்மர்   இருந்தாலும் இதைப்போன்ற எண்ணங்கள் அவருக்குள் ஓடவில்லையென்று எதையும் சொல்ல முடியாது.   ஆயினும் அந்த எண்ணங்கள் அவரின் செயல்களுக்கு பொறுப்பாகின்றனவா எனப்பார்க்கவேண்டும்பீஷ்மரின் ஆளுமையை இதைப்போன்ற கூற்றுக்களைக் கொண்டு குறைத்துவிட முடியாதுபீஷ்மர் அவளுக்கு அளிக்கும் பதில் இதையே கூறுகிறது. அவர் அவள் சொல்வதை மறுத்து விவாதிக்கவில்லை. ஏனென்றால் இதைபோன்ற நல்லவையும் அல்லாதவையுமான நோக்கங்களை எவர் மீதும் சொல்லமுடியும்.


பீஷ்மர் அவளை நோக்கிஉறவுகளை இப்படி ஆராய்ந்தால் ஒன்றும் எஞ்சாது, பெண்ணே. ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றும் உண்மையென்று தோன்றும். எதையும் எப்படியும் விளக்கிக்கொள்ளவும் இயலும்என்றார்.
பீஷ்மர்உள்ளத்தைப்பற்றி எவரும் எதையும் சொல்லிவிடமுடியாது, அல்லது எவரும் எதையும் சொல்லலாம்என்றார்.


பீஷ்மர் இறுதியாக அசலையிடம் இது அரசு சூழ் உரை என்று கூறுகிறார். அரசு சூழ் உரையில் அதை நிகழ்த்துபவருக்கு ஒரு நோக்கம் இருக்கும்அந்த நோக்கம் நிறைவேறும் பொருட்டு அவர் எதிர் நிற்பவர் மறுக்க முடியாத கூற்றுக்களைக் கூறுவார். ஆனால் அதில் அவரே  நம்பாத, இதுவரை பொருட்படுத்தாதகூற்றுக்கள் இருக்கும்அங்கு வெற்றி பெறப்போவது உண்மையாக இருக்கவேண்டுமென்பதில்லைவாதத் திறமைதான் வெற்றியை நிர்ணயிக்கப்போகிறதுஅந்த உரை நிகழ்ந்த பிறகு அந்தக் கூற்றுக்கள் மதிப்பிழந்துபோய்விடும்ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுமட்டும்தான் பொருட்படுத்தப்படும்அப்படியே இதுவரை அசலை செய்ததெல்லாம் அவள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காகத்தான். மற்றபடி இந்த கூற்றுக்கள் பின்னர் அவள் மனதில் பொருளற்று  போய்விடும் இதையெல்லம் நானா பேசினேன் என்று அவள் வியக்கக்கூடும். அதை இருவரும் உணர்ந்திருக்கிறார்கள்.   அதன் காரணமாகவே இவ்வளவு சீற்றமாகப் பேசிய அசலையால் இறுதியில் புன்னகைக்க முடிகிறதுஇருவரும்  ஒரு நாடகத்தை நடித்து முடித்த நிம்மதியைப் பெறுகிறார்கள்.     

பீஷ்மர் விழிதூக்கிஅல்ல, நான் அறிந்த அரசுசூழ் உரைகளில் இப்போது நீ நிகழ்த்தியதே மிகச் சிறந்தது. இத்தனை கூரிய சொற்களையும் முழுமுற்றான சொல்லாடலையும் உன்னால் எப்படி இயற்றிக்கொள்ள இயன்றது என்று வியந்தேன்என்றார்

அசலை நீள்மூச்சுடன் புன்னகைத்துதன் குஞ்சுகளைக் காக்க சிறுதாய்க்குருவி கருநாகத்தை கொத்தி துரத்துவதை தாங்கள் கண்டிருக்கலாம். இது அன்னையரில் தெய்வங்கள் எழுந்தளிக்கும் ஆற்றல்என்றபின்வணங்குகிறேன், பிதாமகரேஎன்றாள். பீஷ்மர் கைதூக்கி அவளை வாழ்த்தினார்.


தண்டபாணி துரைவேல்