Friday, January 5, 2018

முதற்கனல்



பெரும் வணக்கத்திற்குரிய எழுத்தாளர் திரு.ஜெயமோகன்  அவர்களுக்கு 

தங்கள் எண்ணற்ற வாசகர்களுள் ஒருவன் அன்புடனும்,பணிவுடனும் எழதும் மடல்.

தங்களுடைய "வெண்முரசு"மகாபாரத நாவலின் முதல் பகுதியான " முதற்கனல் " புத்தகத்தை வாசிக்கும் பாக்கியம் இரு வாரங்களுக்கு முன் தான் கிடைத்தது. எந்தவொரு நாவலையும்,நிதானமாக உள்வாங்கிப் பொறுமையாகப் படிக்கும் பழக்கம் இருப்பதால், ஒவ்வொரு வாக்கியத்தையும் ரசித்து,ருசித்துப் படித்து நேற்றிரவு தான் முடித்தேன்.

அடுத்தடுத்த பகுதிகளைப் படிப்பதற்கு முன்பாகவே....தங்களுடைய இந்த மகத்தான பணியைப் பாராட்டி எழுத வேண்டியது...கடமை என்று தோன்றியது.
எழுத்துக்களில் புதிய நடையும், அருஞ்சொற்களும், தமிழின் நயமும்,ஆளுமையும் படிக்கப் படிக்க...பிரமிக்க வைத்தன. சாட்ஷாத் சரஸ்வதி தேவியின் அருளும், வியாச முனிவரின் ஆசியும் இல்லாமல் இத்தகைய வாக்கியப் பிரயோகங்கள் சாத்தியமல்ல.
தங்களது மேலான இந்தப் பணி இனிதே நடைபெறவும்,முழுமையாக நிறைவேறவும் எல்லாம் வல்ல ஸ்ரீவினாயகப் பெருமானைப் பிராத்திக்கிறேன்.
தங்களுக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய பணிவான வணக்கங்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- செ.கணேசலிங்கம்

அன்புள்ள கணேசலிங்கம் அவர்களுக்கு

முதல் விஷயம் எண்ணற்ற வாசகர்கள் இல்லை. எண்ணிவிடலாமளவுக்கு குறைவே. நான் எழுதுவனவற்றை எல்லாரும் வாசிக்கமுடியாதாகையால் நான் அவ்வாறு எதிர்பார்ப்பதுமில்லை.

முதற்கனல் வாசித்தீர்கள் என்பது உவகை அளிக்கிறது. அது ஒரு தொடக்கம். விதையின் செறிவு. அதிலுள்ளவை அனைத்தும் விரிந்து பரவுவதையே அடுத்த நாவல்கள் காட்டுகிறன

ஜெ