Wednesday, February 14, 2018

காட்சி மயக்கம்



ஒரு சிறு வழிவெனத் துவங்கி பொங்கிப் பெருகி பெருங்கடலோடு இணையும் ஒரு நதியைப் போன்று, இயல்பான உணர்வெழுச்சியில் துவங்கி மொழியால் அதை அள்ளி பிரபஞ்சமளாவிய பேருண்மையைச் சுட்டி நிற்கும் வரிகள் வெண்முரசின் தனித்துவங்களில் முக்கியமானவை. காவியம் அளவுக்கே முக்கியமானவை அவை. நாவலில் காலூன்றி, அதைக் கடந்த, என்றுமுள்ள ஒன்றைச் சுட்டி நிற்கும் உயர் கவித்துவம் கொண்டவை அவை. நியாயமாக ஒரு கவிதை நூலில், நவீன கவிதையாக வந்திருந்தால் கவிதைச் சாதனையாகக் கொண்டாடப்பட்டிருக்கக் கூடியவை. நாவலின் இடையில் கதாபாத்திரங்களின் ஊடாக, உரையாடலாக, உள் ஒலி குரலாக வருவதாலேயே எளிதாகக் கடந்துசெல்லப்படுபவை. பல சமயங்களில் மீள் வாசிப்பிலோ, அதைக் கண்டடைந்த நண்பர்கள் உடனான உரையாடலிலோ அல்லது ஏதேனும் ஒரு கடிதம் வாயிலாகவோ அவற்றை வாசித்தடையலாம். எப்போதுமே சொல்வது போல வெண்முரசின் ஒவ்வொரு வரியும், வார்த்தையும் பொருள் மிக்கவையே, தவற விடக் கூடாதவையே.

அத்தகைய கவித்துவ வரிகளில் சில இன்றைய வெண்முரசில் கர்ணனின் மூத்த அரசி விருஷாலியின் எண்ண ஓட்டங்களாக வந்துள்ளன. நாளவன் கோவிலில் புலரி வழிபாட்டுக்கு வரும் அவள் உள்ளே ஒலிக்கும் முது சேடி காளியின் வார்த்தைகள் தான் அவை. காட்சி மயக்கம் என்னும் ஒரு முக்கியமான அறிதலின் வழியைப் பற்றியவை அவை. எளிதாகக் கடந்து செல்லவிருந்த என்னை இழுத்து கவனிக்க வைத்தவை இப்புவியின் பருப்பொருட்பெருக்கே பிறிதொன்றை சொல்லும் பொருட்டு வைக்கப்பட்ட குறிகள்தான். இது இறைச்சிப் பொருள் தாங்கி நிற்கும் பெருங்காவியம். ” என்னும் வரிகள். குறிப்பாக இறைச்சிப் பொருள் தாங்கி நிற்கும் பெருங்காவியம் என்னும் வரி. இப்புவியையே காவியமாகக் காணச் சொல்லும் தரிசனம்.

‘இறைச்சிப் பொருள்’ என்பது இலக்கணத்தில் நாம் படித்திருப்போம். தொல்காப்பியம் கூறுவது, (உள்ளுறை உவமம் மற்றும் இறைச்சிப் பொருள்). காட்சிமயக்கம் என்பதை மறுமெய்மை எனக் கூறும் வெண்முரசு நம் கண் முன் தோன்றும் ஒவ்வொன்றிலும் காணப்படும் ஒன்றைத் தாண்டி சுட்டப்படும் ஒரு பொருளை, காட்சியைக் காணச்சொல்கிறது. அதைக் காணும் கண்களுக்கு புற உலகின் விதிகள் இல்லை. இல்லாவிட்டால் காலை கதிரோனின் ஒளியில் எழுந்து வரும் இப்புவியை ‘பொன் எனப் பிறந்து வெள்ளியென ஒளிர்ந்துபொருளென்றாகி பயனென்று கனியும் பருப்பொருட்களால் ஆனது இப்புவி’ –எனக் கொள்ள இயலாது. இது கோவில், இது சிற்பம் எனப் பார்ப்பது ஒரு வகை என்றால் இது பொன் ஆபரணம் எனத் தோன்றுவதும் ஒரு பார்வையே. இருப்பதில் இருந்து காணக் காண வளரும் ஒன்றுக்குச் செல்ல ஒரு வழி அமைப்பதாலேயே ‘விழிமயக்கென்பது முழுதறிவுக்குச் செல்வதற்கான பாதை’ என்கிறாள் காளி.

படிமம் எனத் தேங்கிய ஒன்று அல்ல இறைச்சிப் பொருள். பொருள் மயக்கத்தின் ஊடாக வளர்வது. படிமம் என்பது ஐரோப்பிய பார்வை. Image எனக் குறிப்பிடப் படுபவை. தெளிவாக சுட்டுபவை. மனப்படிமங்கள் போன்றவை பிற்காலத்தியவை. அவையும் அப்படி ஒரு புள்ளியில் துவங்கி வளர்ந்து கொண்டே செல்பவை அல்ல. வரையறைக்குட்பட்டவை. உறைந்து, இறுகி இருப்பதில் இருந்து கருவாகி, உருவாகி, வளர்ந்து உளதாகி, தேய்ந்து இலாதுமாகும் ஒரு பொருளைச் சுட்டக் கூடிய ஒன்றே ‘இறைச்சிப் பொருள்’ எனலாம்.

அப்படி காணும் ஒவ்வொன்றிலும் இருந்து முழுமையை நோக்கிய அறிதலை நல்கும் வளரும் ஒரு கருப்பொருளைக் காண வழியமைத்துக் கொடுப்பதே வெண்முரசு போன்ற பெருங்காவியங்களின் பெருமை. அவ்வழியைக் கண்டடைவதே ஒரு வாசகனின் முன் உள்ள சவால். அச்சவாலை சந்தித்து, வெல்வதே வெண்முரசை வாசிப்பதன் நிறைவு.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்