Sunday, February 4, 2018

ஷத்ரியப்பேரவை



அன்புள்ள ஜெ,

ஷத்ரியப்பேரவை பற்றிய வர்ணனைகள் வர ஆரம்பித்ததுமே, துரியோதனன் தலையை மழித்திருக்கிறானே, அவன் அவைபுகும்போது எப்படி வர்ணிக்கப்படுவான் என்று தோன்றியது. ஒருவேளை அவன் முடிசூடி வந்தால் இது ஒரு பொருட்டல்ல என்றும் தோன்றியது. ("இவ்வளவு நாட்கள் வெண்முரசு வாசித்தும் அவை முறைமைகள் தெரியவில்லையே, மூடா.. அரசர்கள் அரியணை அமரும்போதுதானே முடிசூடுவார்கள்" உங்கள் மனக்குரல் கேட்கிறது). 

இன்று அவன் தேரில் இருந்து இறங்கி அவைக்கூடத்தை நோக்கி நடக்கும்போது "மார்பில் பொற்கவசம்.." என்று வர்ணனை ஆரம்பித்ததும் ஒரு எதிர்பார்ப்புடன் படித்தேன். மார்பு, இடை, தொடை, பாதம் என்று கீழே சென்ற வர்ணனை  திரும்பி மேலே சென்று, முளைத்துக்கொண்டிருக்கும் தலைமுடியை "இளங்காற்றில் தளிர்புல்லென" வர்ணித்து முடிகிறது. ஒன்று தன்மீது புணைந்து கொள்ளும் பொன் அணி; வெளியில் இருந்து வருவது. மற்றது தன்னிடம் இருக்கும் ஒன்றை உதிர்த்துவிட்டதன் அடையாளம். ஆகவேதான் இந்த வரிசையில் வர்ணனை அமைந்துள்ளது என்று தோன்றுகிறது. 

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை