Thursday, February 8, 2018

நீலன் - அலைகளில் திரள்வது


நீலன் சத்திரியர் சபையில் சொல்கிறான் , நிலமும் செல்வமும் அல்ல நான் வேண்டுவது .என்னை நிறைவு செய்வது  அறமும் கருணையுமே . என .

நீலனின் அறம் என்ன ?   நீலன் பாண்டவர்கள் வசம் திரும்பி சென்று ,தான் சென்று வந்த முதல்தூதின் போது  அங்கே சபையில் நிகழ்ந்தவற்றை விரிவாக உரைக்கிறான் . துரியன் தன்னை கலி மைந்தனாக அறிவித்தது மட்டும் சொல்லாமல் விட்டு விடுகிறான் .  ஆம் துரியன் அறிவித்து மட்டுமே இருக்கிறான் ,அதிலிருந்து அவன் பின் வாங்க பல்வேறு சாத்தியங்கள் இன்னும் அங்கே உண்டு .அந்த சாத்தயங்களை கணக்கில் கொண்டே நீலன் அதை சொல்லாமல்  தவிர்த்து விடுகிறான் .  அனைத்துக்கும் மேல் நீலன் அறத்தின் மூர்த்தி .கருணையின் நாயகன் . இந்த உலகே கூடி துரியனை கலி மைந்தன் என,திருதா உட்பட  வெறுத்தாலும் சரி நீலன் அதை செய்ய மாட்டான் . 

நீலனின் கருணையில் ,அறத்தில் ,விளைவான இணையற்ற செய்கை என்பது  அந்த சத்திரியர் அவையில் இருந்து வேத ஞானிகளை வெளியேற சொன்னது .  அது நீலன் செய்த  அதிரடி அல்ல ,அது அவனது கருணை அவனுக்கு சொன்ன அறம் . விதி அந்த வேத ஞானிகளை அங்கேயே தளைத்தது. விளைவு   அறமோ கருணையோ இன்றி நிலத்தின் பொருட்டு ஒரு குலமகள்  சொல்லால் கற்பழிக்கப்பட்ட அந்த அவையில்,அதை செய்த சத்ரியனை  தங்கள் வேத சொல் காத்து  கொண்டு  அவர்கள் காத்து நிற்க நேர்ந்தது . 

துரியன் கலி மைந்தன் என்றாவது கலி மீதான பிரியத்தால் அல்ல ,மண் மீதான வேட்கையால் இந்த கணக்கு அவனுக்குள் நுழையும் போதே ,நிகழ்வுகள் எங்கு செல்லும் என அவன் யூகித்து விட்டான் .  அதனால்தான் அவன் சத்திரியர் கூடிய அந்த சபைக்கு கர்ணனை அழைக்க வில்லை .  கர்ணனை வைத்துக் கொண்டு குந்தியின் கற்பை அவனால் சபையில் உசாவ இயலுமா என்ன ?  கர்ணனன்  குறித்து  கேள்வி கேட்கும் ஒரே ஒரு சத்ரிய அரசனையும் தர்க்க பூர்வமான பதிலைக் கொண்டு வாயடைக்கிறான் .  இன்னும் ஒரே ஒரு கேள்விதான் .  கர்ணனுக்கு நீ அங்க தேசத்தை கொடை  அளித்தாய் .அதன் பிறகே கர்ணன் தன்னை சத்ரியன் என நிறுவினான் . அந்த வாய்ப்பை நீ ஏன் பாண்டவர்களுக்கு அளிக்க கூடாது ?  இது கேட்கப்பட்டிருந்தால்  துரியனின் பதில் என்னவாக இருந்திருக்கும் ?   . துரியன்  ''கர்ணனின் சத்ரிய வீரத்தை கண்டு அவன் முன் பணிந்து  வழங்கப்பட்ட நாடு அது .கர்ணன் எவரையும் தூது அனுப்பி பிச்சை கேட்கவில்லை ''என சொல்லி இருப்பான் .  

நீ சத்ரியனா என கேட்கும்போது ,புன்னகை தவழ படையாழியை சிசுபாலன் மீது ஏவினான் நீலன் . ஒன்று மற்றொன்றால் சமன் செய்யப்படும் .இயற்க்கையின் நியதி . இதோ இன்று நீலனை சொல்லால் ஒரு படையாழி வந்து அவன் சிரம் அறுக்கிறது .நீலனால் ஏதும் செய்ய இயலவில்லை .  இது பதில் செயலே எடுக்க வழி இன்றி ,கையறு நிலையில் நீலனை நிறுத்தி வைத்து ,அவனுக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம் .

அன்று திரௌபதி கைவிரித்து வாய் விட்டு எதை கூவினாளோ ,அதை நீலன் மனதுக்குள் இப்போது கூவி இருப்பான் .

எழுக  உன் புதிய வேதம் .ஒவ்வொருவருக்குமான வேதம் .  

எது அறமோ எது கருணையோ அதன் பொருட்டு எழப்போகும் வேதம் .  கர்ணனை ,துரியனை ,பீஷ்மனை ,இருளை வணங்கும் ஆயிரம் ஆயிரம் உலுத்தர்களை கொன்று குருதியாடி எழப்போகும் வேதம் .

எழுக உன் புதிய வேதம் 

கடலூர் சீனு