Saturday, March 3, 2018

இனிய உளவாக இன்னாத கூறல். (குருதிச்சாரல் 72)


   

 நாம்  இந்த நபருக்கு இப்படி தோன்றவேண்டும்  நம் ஆளுமை  இப்படி வெளிப்படவேண்டும் என நினைத்து நம் பேச்சை அமைத்துக்கொள்கிறோம்ஒருவரிடம் உதவி தேவைப்பட்டால் நம் பேச்சு பணிவான சொற்களை அணிந்துகொள்கிறது. நம்மைவிட தகுதி குறைந்தவர்கள் என நினைத்து நாம் பேசும்போது ஆணையிடும் தொனி வரும் வார்த்தைகள் சொல்லில் அமைகின்றனசினத்தில் வெறுப்பு உமிழ்பவையாக நம் சொற்கள் வெளிவருகின்றனதுக்கத்தில் தன்னிரக்கத்தில் தோய்ந்தவையாக கூறும் வார்த்தைகள் இருக்கின்றன.   ஒருவருடைய பேசும் முறை இப்படி மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் உள்ளத்தை ஒரே உணர்வில் அதிகம் வைத்திருப்பவர்கள் பேச்சு அந்த உணர்வு சார்ந்தே அதிகம் இருப்பதால் அவர்கள் பேச்சின் இயல்பு அந்த உணர்வு சார்ந்ததாகவே எந்த சூழலிலும் அமைந்துவிடுகிறதுஅடிக்கடி கோபம்கொள்ளும் ஒருவர் அப்போதெல்லாம் கடுமையான சொற்களையே பேசுகிறார். ஆனால் அவர் சினமில்லாதபோதும் நாப்பழக்கத்தின் காரணமாக கடுமையான  சொற்கள் பேசுவதைப்  பார்க்கிறோம்.    சிலர் தம்மை மற்றவர் மதிக்கவேண்டுமென்பதற்காக, அல்லது மற்றவர் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக தம் பேச்சு முறையை மற்றவரை சீண்டுவதாக அமைத்துக்கொள்வார்கள். சில நாட்களில் அந்த நடை  அவர்களுக்கு பழகிப்போய் எப்போதும் அதே முறையில் பேசுவார்கள். அதனால்தான் சிலர் எவ்வித காரணமுமின்றி மற்றவர் புண்படும்படி பேசுவதைக் கண்டிருக்கிறோம்
     

ஒரு செயன் காரண்மாக ஒருவர் புண்படுவதற்கு  சிறிது நேரம் எடுக்கும். மற்றும் செயல் மூலம் ஒருவர் பாதிப்படையும்போது அறியாது நிகழ்ந்துவிட்டது என காரணம் கூற முடியும். அவர் உள்ளத்திலிருந்து அந்த பாதிப்பை நாம் அகற்றிவிடுவதற்கு வாய்ப்பிருக்கும்ஆனால் ஒருவரிடம் இன்னாத சொல் ஒன்றை சொல்கையில் அது அவரை உடனே  புண்படுத்தும். பின்னர் எதைச்சொல்லியும் அதை மாற்றிக்கொள்வது மிகக் கடினமானதாக இருக்கும்பெரும்பாலும் செயலாகச் செய்தது நிலத்தில் நிகழ்வது, என்றாலும்  அதன் பாதிப்பு சீக்கிரம் மறைந்துவிடுகிறது. ஆனால் சொல்வது காற்றில் நிகழ்வது  இருப்பினும் அதன் பாதிப்பு நீடித்திருக்கிறது
 

மேலும் இன்னாத கூறலினால்  நமக்கு சாதகமானது நடக்கும் என்பது வெகு அரிதானது. அதே நேரத்தில் இனியவை கூறலில் நம் அன்பு வெளிப்படும். கேட்பவர் உள்ளத்தில் நம் மீதான அன்பைத்தூண்டும். அதனால் அது எப்போதும் நமக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும். ஆயினும் மனிதர்கள் இன்னாத கூறலை அதிகம் மேற்கொள்கிறார்கள். கேட்பவரின் உள்ளத்தை குத்தி காயமாக்கும் வார்த்தைகள் வெகு எளிதாக வெளிவருகின்றன. பெரும்பாலும் அதற்கான பயன் எதுவும் இருக்காது. தன் அகங்காரத்தை திருப்தி செய்து கொள்வதற்காகவும்  எதிர் நிற்பவரின் அகங்காரத்தை இழிவுபடுத்துவதற்காக மட்டுமே  இன்னாதவை கூறப்படுகின்றனஅப்படி பேசுவது மேலும் மேலும் எதிர் நிற்பவன் மீதான  கசப்பை அதிகரிக்கவே செய்கிறதுஏனென்றால் ஒரு சொல்லை சொன்ன பிறகு அதற்கான காரணத்தை உள்ளத்தில் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்கிறோம். அப்படிச் செய்வது அவர் மேல் உள்ள வஞ்சத்தை இன்னும் நீடிக்கவைப்பதாக ஆகிறதுகடும் சொற்களை பேசும் நபர் பிறருக்கு தன் மீதான கவர்ச்சியை இழக்கவே செய்கிறார். மற்றவர் நம் மேல் கொண்டிருக்கும் அன்பைநேசத்தை குறைப்பதைத் தவிர வேறு என்ன பயன் இன்னாத சொல்லலில் இருக்கிறது? இன்னாத வார்த்தை ஒன்றைச்சொல்லி எவரும் எந்த விஷயத்திலும் மேன்மையடையப்போவதில்லை. மாறாக ஒருவரின் கீழ்மையை வெளிப்படுத்துவதாகவே அது அமைகிறது
     

கர்ணனிடம் சுப்ரியை பேசுவது அனைத்தும் அப்படிப்பட்டவை.   அவன் மீதிருந்த கசப்பின் காரணமாக அவள் பேசுவது வெறுப்பின் சொற்களைத்தான். அவள் அவனிடம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவனை எச்சொல் காயப்படுத்தும் என தேர்ந்தெடுத்து எய்பவையாக இருந்தனஇப்போது அவள் உள்ளத்திலிருந்த கர்ணன் மீதான கசப்பு முழுமையும் அகன்றுவிட்டது. ஆனாலும் அவனுடன் பேசுகையில் அவள் சொற்களில் மீண்டும் அக்கசப்பு வெளிப்படுகிறது.    அது அவளே எதிர்பார்க்காத வார்த்தைகள். அவை  அவளறியாமலேயே அவளிடமிருந்து வருகிண்றன.   கசப்பு எண்னை வைத்திருந்த குடுவையை காலிசெய்து சுத்தம் செய்த பின்னரும் அதன் கசப்பு முற்றிலும் நீங்கிவிடுவதில்லைபின்னர் அக்குடுவையில்  ஊற்றப்படும் இன்னீரும் கசக்கிறதுகர்ணன் மேல் இப்போது அவள் உள்ளத்தில் காதல் பெருகி இருந்தாலும் சொற்களில்  கசப்பு  முற்றிலுமாக அகலவில்லைஅவள் பேசுவது அவளுக்கே அதிர்ச்சிய்ளிப்பதாக இருக்கிறது.    


அவள் திகைத்து உடல் குளிர்ந்துநடுங்க அமர்ந்திருந்தாள். தன் வாய்க்குள் கொடிய நாகம் ஒன்று நாவென்று அமைந்திருக்கிறதுபோலும். அச்சொற்கள் என்னுடையவை அல்ல. அக்கீழ்மை என்னுடையதல்ல. அரசே, என் கதிரே, அவற்றை என்மேல் ஏறிய ஏதோ இருள்தெய்வமே உரைத்தது. அவள் தொண்டை அடைத்திருந்தது, மூச்சு ஏறியிறங்கியது. ஏன் அதை சொன்னேன்? நாப்பழக்கமாகவா? அன்றி அவனை வேல்நுனியால் குத்தி எனை நோக்குக என்றேனா? அச்சொல்லை திரும்ப எடுப்பது எப்படி? அது இழிசொல்லே. கீழ்மையென நான் வெளிப்பட்ட தருணமே.
  

ஆகவே நமக்கு எவ்வித பயனுமற்ற  இன்னாத கூறல் என்ற கசப்பை நாம் என்றும் கைகொள்ளாமல் இருக்கவேண்டும்.    அது ஒரு  ஒரு போதைப்பழக்கமென   நம் உள்ளத்தை பிடித்துக்கொள்ளும் இயல்புள்ளதாக  இருக்கிறது



தண்டபாணி துரைவேல்